`ராணுவத்தை சரணடைய சொல்லவில்லை'- உக்ரைன் அதிபர் ஆவேசம்


உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி

"ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி. அவ்வாறு நான் கூறவில்லை. இது எங்கள் நாடு, எங்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம்" என்று உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி கூறியுள்ளார்.

உக்ரைனை ஆவேசமாக தாக்கி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, `ரஷ்யா எங்களை தாக்கி வரும் நிலையில் தனித்து விடப்பட்டதாக உணர்கிறோம்’ என்று உக்ரைன் அதிபர் வொலதிமீர் ஸெலன்ஸ்கி வேதனை தெரிவித்திருந்தார். இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் பைடன் தொலைபேசியில் பேசினார். 40 நிமிடங்கள் நடந்த பேச்சில், ரஷ்யா மீதான தடைகளை வலுப்படுத்துதல், போதிய ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து பேசியதாக ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, ரகசிய இடத்திலிருந்து உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். `உக்ரைனின் கதி என்ன என்பது இன்று முடிவாகிவிடும். இக்கட்டான நேரத்தில் அமெரிக்கா அளிக்கும் உதவிக்கு நன்றி' எனக் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக பேசிய ரஷ்ய அதிபர் புதின், உக்ரைனில் ராணுவத்தினர் அதிகாரத்தை கைப்பற்றி கொள்ளுங்கள் என்றும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் கூறியிருந்தார். இதனை ஏற்று, நாங்களும் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று கூறியிருந்தார். இதனிடையே, தங்கள் ராணுவ வீரர்களை சரணடைய வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியதாக செய்தி வெளியானது.

இதனை மறுத்துள்ளார் அதிபர் ஸெலன்ஸ்கி. வீடியோ ஒன்றை வெளியிட்டு பேசியுள்ள அவர், "ராணுவத்தை சரணடைய நான் கூறியதாக வெளியான தகவல் வதந்தி. அவ்வாறு நான் கூறவில்லை. இது எங்கள் நாடு, எங்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக போராடுகிறோம். ரஷ்யா தாக்குதலை நிறுத்தாதவரை நாங்கள் ஆயுதங்களை கீழே போடப்போவதில்லை, நாட்டை விட்டுக்கொடுக்க தயாராக இல்லை" என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் உக்ரைனுக்கு கூடுதலாக பாதுகாப்பு உதவிகள் தரப்படும் என அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உக்ரைனுக்கு எவ்வகையில் உதவி செய்யலாம் என ஆலோசித்து வருவதாக பென்டகனின் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார்.

x