‘நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள், பாசிஸ்ட்டுகள்’ - ரஷ்ய வீரரிடம் கொந்தளித்த உக்ரைன் பெண்!


தாக்குதல் நடத்த நுழைந்த ரஷ்ய ராணுவ வீரர்களிடம் உக்ரைன் பெண் ஒருவர் கோபமாகப் பேசும் காட்சி, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

உக்ரைன் தலைநகர் கீவ் அருகே, ரஷ்ய வீரர்களிடம் வாக்குவாதம் செய்த அந்தப் பெண், “நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள், பாசிஸ்ட்டுகள்! துப்பாகிகளையெல்லாம் கொண்டுவந்து எங்கள் நிலத்தில் என்ன செய்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

அவரை ரஷ்ய வீரர்கள் சமாதானம் செய்ய முயன்றனர். அப்போது ஒரு வீரரிடம் சூரியகாந்தி செடியின் விதைகளைக் கொடுத்த அந்தப் பெண், “இந்த விதைகளை உங்கள் பாக்கெட்டில் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் இந்த மண்ணில் வீழ்ந்தவுடன் குறைந்தபட்சம் இந்த விதைகளாவது முளைக்கட்டும்” என்று கூறினார்.

உக்ரைன் தலைநகர் கீவில் இயங்கிவரும் ‘இன்டர்நியூஸ் உக்ரைன்’ எனும் ஊடகம், இந்தக் காணொலியைப் பகிர்ந்திருந்தது. இதை ட்விட்டரில் பகிர்ந்துவரும் இணையவாசிகள், அந்தப் பெண்ணின் துணிச்சலைப் பாராட்டிவருகின்றனர்.

x