சர்வதேச அளவில் கண்டனங்கள் குவிந்த நிலையிலும் உக்ரைன் மீதான தாக்குதலைக் கைவிடவில்லை ரஷ்யா. “அமைதியான நகரங்களை ராணுவ இலக்குகளாக ரஷ்யப் படை மாற்றிவிட்டது” என்று உக்ரைன் அதிபர் வொலாதிமீர் ஸெலன்ஸ்கி குமுறிக்கொண்டிருக்கிறார். தலைநகர் கீவில் குண்டுவெடிக்கும் சத்தங்கள் கேட்கத் தொடங்கிவிட்டன.
இந்தச் சூழலில் நேற்று ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான உக்ரைன் தூதர் செர்ஜீ கைஸ்லைத்ஸியா ரஷ்யத் தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்தார். இது நாஜி பாணி நடவடிக்கை என அவர் கூறினார்.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா, இந்த மாதம் அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கிறது. நேற்றைய கூட்டத்தில் ஐநாவுக்கான ரஷ்யாவின் தூதர் வாஸிலி நெபென்ஸியாவைக் குறிப்பிட்டு கண்டனங்களை எழுப்பிய உக்ரைன் தூதர், “ஊடுருவலோ, தாக்குதலோ நடக்காது என எத்தனை முறை அவரும் அவரது உதவியாளர்களும் இந்த அவையில் எத்தனை முறை கூறியிருப்பார்கள்! நியூயார்க் ப்ரெட்ஸெலில் (இனிப்புப் பண்டம்) இருக்கும் ஓட்டையைவிட உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவு” என்று கூறினார்.
ரஷ்ய ஊடுருவலில் உயிரிழந்த உக்ரைனியர்களுக்காகப் பிரார்த்திக்குமாறு பாதுகாப்பு கவுன்சிலை கைஸ்லைத்ஸியா கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து, டோன்பாஸ் (புதினால் சுதந்திர தேசங்களாக அறிவிக்கப்பட்ட டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்கா பகுதிகள்) பகுதியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாகப் பிரார்த்தனை செய்யுமாறு ரஷ்யத் தூதர் கேட்டுக்கொண்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஊடுருவலுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து 11 நாடுகள் வாக்களித்தன. இந்தியா, சீனா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் வாக்களிக்காமல் தவிர்த்துவிட்டன.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகளுடன் ரஷ்யாவுக்கும் வீட்டோ அதிகாரம் உள்ளது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை ரத்து செய்துவிட்டது. “இந்தத் தீர்மானத்தை வேண்டுமானால் உங்களால் ரத்து செய்ய முடியும். ஆனால், மக்களின் குரல்களை ரத்துசெய்ய முடியாது” என்று ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்டு ரஷ்யத் தூதரிடம் தெரிவித்தார்.
கிழக்கு உக்ரைன் பகுதியில் (டோன்பாஸ்) ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகள் கடந்த எட்டு ஆண்டுகளாக உக்ரைன் அரசுக்கு எதிராகப் போராடிவருகிறார்கள். அங்கு உக்ரைன் நிகழ்த்திய அத்துமீறல்களை மேற்கத்திய நாடுகள் கண்டிக்க மறுத்துவிட்டன என்று ரஷ்யத் தூதர் விமர்சித்தார்.
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபையும் இதேபோன்ற தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.