நடந்தே நாடு கடந்த இந்திய மாணவர்கள்: உக்ரைன் போரின் அவலக் காட்சி!


உக்ரைனிலிருந்து போலந்துக்கு நடந்துசெல்லும் இந்திய மாணவர்கள்...

உக்ரைன் போர்ச் சூழலிலிருந்து தப்பிக்க, அந்நாட்டிலிருந்து போலந்து நாட்டுக்கு இந்திய மாணவர்கள் 8 கிலோமீட்டர் நடந்தே சென்றது, போர் அவலத்தின் வலி நிறைந்த காட்சியாகப் பதிவாகியிருக்கிறது.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலால், அங்கு தங்கியிருக்கும் மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற வேண்டிய சூழல் உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே, 4,000 பேர் மீட்கப்பட்டுவிட்ட நிலையில், இன்னமும் 16,000-க்கும் மேற்பட்டோர் அங்கு அபாயச் சூழலில் சிக்கியிருக்கிறார்கள்.

வான்வழிப் போக்குவரத்தை உக்ரைன் அரசு நிறுத்திவைத்திருப்பதால் விமானம் மூலம் வெளியேற முடியாததால், இந்தியர்களை உக்ரைனின் அண்டை நாடுகளின் நில எல்லை வழியே பத்திரமாக வெளியேற்ற முடிவுசெய்யப்பட்டது. போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா உள்ளிட்ட நாடுகள் இதற்குச் சாதகமான சூழல் கொண்டவை,

உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இது தொடர்பான வழிகாட்டுதல்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. “பாதுகாப்பான வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. உக்ரைன் தலைநகர் கீவிலிருந்து சாலை வழியாகச் சென்றால், 9 மணி நேரத்தில் போலந்தை அடைந்துவிடலாம். 12 மணி நேரத்தில் ருமேனியாவை அடைந்துவிடலாம்” என்று இந்திய வெளியுறவுத் துறைச் செயலர் ஹர்ஷ்வர்த்தன் ஷ்ரிங்லா கூறியிருக்கிறார்.

உக்ரைன் எல்லையில் உள்ள லிவிவ் நகரம், போலந்து நாட்டிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அங்குள்ள மருத்துவக் கல்லூரியில் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பலர் பயின்றுவருகின்றனர். அவர்கள் படிக்கும் மருத்துவக் கல்லூரி ஏற்பாடு செய்த வாகனம் மூலம் போலந்து எல்லை அருகே 40 மாணவர்கள் அனுப்பப்பட்டனர். எல்லையிலிருந்து ஏறத்தாழ 8 கிலோமீட்டர் தொலைவில் சாலையில் அவர்கள் இறக்கிவிடப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் நடந்தே போலந்துக்குச் சென்ற காட்சிகள் காணொலியாக வெளியிடப்பட்டிருக்கின்றன. மாணவர்களில் ஒருவர் அந்தக் காட்சிகளை வெளியிட்டிருக்கிறார். ரஷ்யப் போர் விமானங்களின் தாக்குதலிலிருந்து நம்மவர்கள் உயிர் பிழைத்திருப்பது ஒரு வகையில் ஆறுதல் என்றாலும், போர் எனும் பேரழிவு ஏற்படுத்தும் எண்ணற்ற அவலங்களில் ஒன்றாக நம் மாணவர்களின் இந்த நடைப்பயணம் அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

ரஷ்யத் தாக்குதலின் பெரும்பகுதி, ரஷ்ய எல்லை அருகே உள்ள கிழக்கு உக்ரைனில்தான் நடந்துவருகிறது. இந்நிலையில், உக்ரைனின் மேற்குப் பகுதியில் உள்ள லிவிவ் மற்றும் செர்னிவ்ஸ்டி ஆகிய நகரங்களில் இந்தியர்களை மீட்பதற்கான முகாம் அலுவலகங்களை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் திறந்திருக்கிறது.

சில மாணவர்கள் நில எல்லை வழியே உக்ரைனின் மற்றொரு அண்டை நாடான ருமேனியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கின்றனர். உக்ரனின் அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்களை அழைத்துவர சிறப்பு விமானங்களை இந்தியா அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x