உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்க புதிய திட்டம்!


உக்ரைனில் தவிக்கும் பல தேசத்து மாணவர்கள்

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க, பல குழுக்களாக இந்திய அதிகாரிகள் உக்ரைனின் எல்லையோர நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவிலிருந்து சுமார் 20 ஆயிரம் பேர் உக்ரைன் நாட்டுக்கு சென்றுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி பயிலச் சென்ற மாணவர்கள். பிப்.24க்கு முன்னதாக இவர்களில் சில ஆயிரம் பேர் தாயகம் திரும்பியுள்ளனர். எஞ்சிய பெரும்பான்மையானோரை மீட்க இந்தியா திணறி வருகிறது.

உக்ரைன் தனது வான்பரப்பை மூடியுள்ளதாலும், ரஷ்ய ஏவுகணை தாக்குதல்கள் காரணமாகவும், உக்ரைனுக்கான வான்வெளிப் பயணம் இயலாததாக மாறி உள்ளது. உக்ரைனின் விமான நிலையங்களும் ரஷ்யாவின் ஏவுகணைகளால் சிதிலமடைந்துள்ளன.

உக்ரைனுடன் எல்லையை பகிர்ந்துகொண்டிருக்கும் ரஷ்யா தவிர்த்த நாடுகளின் வழியாக உக்ரைன் இந்தியர்களை மீட்பதற்கு இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக அயலுறவுத்துறையில் தேர்ச்சி பெற்ற அதிகாரிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட குழு, பாதுகாப்பான தரைவழித் தடங்களை அடையாளம் கண்டுள்ளது.

உக்ரைன் இந்தியர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இந்திய அதிகாரிகள், இந்த தரைமார்க்கமாக பாதுகாப்புடன் இந்தியர்களை மீட்கத் திட்டமிட்டுள்ளனர். இந்த எல்லை நாடுகளுக்கான வான்மார்க்க பயணமும் ஆபத்தானது என்பதால் இந்திய அதிகாரிகள் தரைமார்க்கமாகஅந்த நாடுகளின் எல்லை பிராந்தியங்களை நெருங்க உள்ளனர்.

முன்னதாக ரஷ்ய அதிபர் புதினிடம் தொடர்புகொண்ட இந்திய பிரதமர் மோடி, தனது உரையாடலில் இந்தியர்களின் மீட்பு குறித்த கவலையையும் பகிர்ந்துகொண்டதாக தெரிகிறது. இதனால் ரஷ்ய துருப்புகள் குறித்த அச்சமின்றி உக்ரைன் எல்லைகளில் இந்திய மாணவர்களின் மீட்பு நடவடிக்கை நடைபெறும் என இந்தியா நம்புகிறது. இந்தியாவிலிருந்து விரையும் அதிகாரிகள் குழுவுடன், உக்ரைன், போலந்து, ஹங்கேரி நாடுகளின் தூதரக அதிகாரிகள் இணைந்து இந்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளனர்.

x