நெருங்கும் உளவாளி; மரண பயத்தில் ஜோக்கர்


ஸெலென்ஸ்கி - புதின்

ஸெலென்ஸ்கி இதற்கு முன்னதாக நடித்த தொலைக்காட்சி நாடகத்தில், தேசத்தின் அதிபராக தோன்றியிருக்கிறார். சகல ஒத்திகையோடும் அவர் பேசிய வசனங்கள் மற்றும் நடிப்புக்கு ஏக வரவேற்பும் பெற்றிருக்கிறார். ஆனால், அந்த நாடகத்தில் போர் தருணம் ஏதும் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை. உக்ரைன் அதிபராக ஸெலென்ஸ்கி தடுமாறுவதைப் பார்த்து, மேற்கு ஊடகங்கள் இப்படித்தான் அவரை விமர்சிக்கின்றன.

காமெடி நடிகராக மக்களைக் கவர்ந்த ஸ்லென்ஸ்கி, உக்ரைன் அதிபரான பின்னரும் அடிக்கடி உளறி வைத்து, அது அவல நகைச்சுவையில் சேர்ந்த சம்பவங்கள் அதிகம். ரஷ்யாவின் முழு வீச்சிலான போர் தொடங்குவதற்கு முன்னர், ரஷ்யாவை சீண்டும் வகையில் அவர் உளறிவைத்தது இதற்கு உதாரணம். இப்போது இந்த முன்னாள் காமெடி நடிகர், உலக நாடுகளைப் பார்த்து கதறாத குறையாக இறைஞ்சுகிறார். உதவத்தான் ஆளில்லை.

அமெரிக்கா டன் கணக்கில் ஆயுதங்களையும் அதைவிட அதிகமான உத்திரவாதங்களையும் வழங்கி இருந்தது. அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படி என்று உக்ரைன் குடிமக்கள் தடுமாறி வருகின்றனர். ரஷ்யா ராணுவம் உக்ரைனுக்குள் நுழைந்த பிறகு, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார அழுத்தத்தைத் திணிக்கும் ஒருசில உத்தரவுகளோடு ஐரோப்பிய, ஆசிய நாடுகள் பலவும் தங்கள் கடமை முடிந்ததாக வாளாவிருக்கின்றன.

நேட்டோ படைகள் உக்ரைன் உதவிக்குச் சென்றால் உலகப் போர் வெடிக்கும் வாய்ப்புள்ளதால், மேற்குலகம் கள்ள மவுனம் சாதிக்கிறது. மோடி சொல்லி புதின் போரை நிறுத்திவிடுவார் என்று உக்ரைன் ராஜாங்க அதிகாரிகள் நம்பும் அளவுக்கு, விரக்தியில் உக்ரைன் விழுந்திருக்கிறது.

ஸெலென்ஸ்கி நன்றாகப் பேசுவார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அப்படிப் பேசியே மக்களின் ஆதரவை வென்றார். இந்தப் பேச்சை முன்வைத்தே, ரஷ்யாவிடம் வரம்பு மீறி உரசல் வெடிக்காதும், ஐரோப்பிய நாடுகளுடன் இணக்கமும் பாராட்டி வந்தார். ஆனால், ரஷ்யாவின் இழுத்த இழுப்புக்கு தலையாட்டும் பொம்மையாக உக்ரைன் இருக்கக்கூடாது என்பதில் முடிவாக இருந்தார். அதே வேளை, ரஷ்யாவுக்கு எதிரான ஆட்டத்தில் மேற்கு நாடுகள் உக்ரைனை பயன்படுத்திக் கொள்வதையும் வெறுத்தார்.

ரஷ்யா - மேற்குலகு இரண்டுக்கும் போக்கு காட்டி, புதிய பாதையில் சென்றுவிட பிரயாசைப்பட்டார். மிரட்டுவதற்கு அப்பால் முழுமையான போர் நடவடிக்கையில் ரஷ்யா இறங்காது என்று நம்பினார். அதைவிட அதிகமாக, மேற்கு நாடுகள் உக்ரைனை காப்பாற்றும் என்றும் நம்பினார். கடைசியில் இரண்டுமே பொய்த்துப்போனது.

அடுத்த 24 மணி நேரத்தில் தலைநகர் கீவ் ரஷ்யாவிடம் வீழ்ந்துவிடும் என்கிறார்கள். இப்போதே, உக்ரைன் ராணுவ வீரர்கள் ஆங்காங்கே சரணடைந்து வருவதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி பரப்பி வருகின்றன. உக்ரைனின் பாதுகாப்பு அமைச்சகம் தனது துறையின் ரகசிய ஆவணங்களை பகிரங்கமாய் எரித்து வருகிறது. வீடுதோறும் ஆண்கள் போரிட வருமாரு உக்ரைன் அரசு அறைகூவியும், சரிநிகரற்ற இந்தப் போரில் போரிட்டு அநியாயமாய் செத்துப்போக முடியாது என்று நாட்டைவிட்டு வெளியேறுவோர் அதிகரித்து வருகின்றனர்.

எல்லாவற்றையும்விட, மரண பயத்தில் அதிபர் ஸெலென்ஸ்கி தவித்து வருகிறார். புதினுக்கு போன் போட்டு அதை அவர் செவிமெடுக்காததற்கே புலம்பித் தீர்த்தவர் ஸெலென்ஸ்கி. இப்போது எதிர்த்து போரிடவும் முடியாது, ராணுவத்தினர் குடிமக்கள் சாவதையும் காணச் சகியாது தவித்துக்கொண்டிருக்கிறார். ஜோக்கராக பிரபலமானவரின் உருக்கமான நிமிடங்கள் கடந்துகொண்டிருக்கின்றன. உக்ரைன் வரலாற்றில் ஸெலென்ஸ்கிக்கு நிச்சயம் இடமுண்டு. ஆனால் அவர் எப்படி நினைவுகூரப்படுவார் என்பதுதான் இங்கே கேள்வி.

x