உக்ரைனில் இந்தியர்களின் பாதுகாப்புக்கு தூதரகம் உதவிக்கரம்!


உக்ரைனில் இருந்து வெளியேறும் குடிமக்கள்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு இந்திய அரசு இயன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அவர்களுக்கு அவசியமான வழிகாட்டுதல் மற்றும் அறிவுறுத்தல்களை அங்குள்ள இந்திய தூதரகம் வழங்கியுள்ளது.

உக்ரைனுக்கான இந்திய தூதர் சார்பிலான அந்த அறிவிப்பில், ’இந்தியர்கள் அனைவரும் நன்கு அறிமுகமான இடத்திலேயே தங்கவும். பயணத்தில் இருப்போர் தாங்கள் பழகிய இடத்துக்கு திரும்பவும். இயல்பு சூழல் திரும்புவரை அமைதி காக்கவும். சக இந்தியர்களுடன் தொடர்பில் இருக்கவும். அவசியமெனில் புலம்பெயர்ந்த இந்தியர்கள் உதவியை நாடலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ’போர் பதட்டம் சூழ்ந்த பகுதிகளில் அருகிலுள்ள பதுங்கு குழிகளில் சென்று பத்திரமாக இருக்குமாறும், இதே தேவைக்கு, அருகிலுள்ள மெட்ரோ சுரங்க தளங்களை நாடுமாறும்’ வழிகாட்டுதல்களை வழங்கியுள்ள தூதரகம், பதுங்கு குழிகளை அடையாளம் காண கூகுள் மேப் உதவியை பெறுமாறு தெரிவித்துள்ளது. மேலும், ’தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக கணக்குகளை பின்தொடர்ந்தும், அவ்வப்போது தேவையான வழிகாட்டுதல்களை பெறலாம்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, போர் அச்சம் காரணமாக ஏராளமான உக்ரைன் குடிமக்கள் தரைமார்க்கமாக அண்டை நாடுகளுக்கு பயணப்பட்டு வருகிறார்கள். உக்ரைனின் போலந்து எல்லையில் இந்தியர்களை வரவேற்று உதவுவதற்காக, சிறப்பு குழு ஒன்றினை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா, மக்களின் குடியிருப்பு பகுதிகளை தாக்க மாட்டோம் என்றும், ராணுவ தளங்கள் மட்டுமே தங்களது குறி என்றும் முன்னதாக தெரிவித்திருந்தது. இதற்காக துல்லியமும், பாதுகாப்பு அம்சங்களும் கூடிய குண்டுகளை ரஷ்யா பயன்படுத்துகிறது. அப்படியும் பத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள், ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

x