உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்கள், கத்தார் வாயிலாக இந்தியாவுக்கு திரும்பலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், உக்ரைனிலிருந்து கத்தார் செல்வது குறித்து இந்திய அரசு விளக்கம் எதையும் தரவில்லை.
சுமார் 20 ஆயிரம் இந்தியர்கள், போர்ச் சூழலின் மத்தியில் உக்ரைனில் சிக்கி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் உயர்கல்வி பயிலச் சென்ற மாணவர்கள். இவர்களை மீட்பதற்காக ஏர் இந்தியாவின் சிறப்பு விமானங்களை இயக்க இந்தியா முடிவு செய்திருந்தது. அதன்படி முதல் விமானம் பிப்.22 அன்று உக்ரைன் சென்று இந்தியர்களை மீட்டு வந்தது. இரண்டாவது விமானம் இன்று காலை கிளம்பிய சூழலில், உக்ரைனின் வான் எல்லை மூடப்பட்டதால் பாதி வழியில் இந்தியா திரும்பியது.
இவற்றின் மத்தியில் உக்ரைனில் உள்ள இந்தியர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் உக்ரைன் தேசம் முழுமையான போர்த் தாக்குதலுக்கு ஆளாகியுள்ள சூழலில் அவற்றை எப்படி மேற்கொள்வது என்பதில் சிக்கல்கள் எழுந்துள்ளன.
உக்ரைனின் ராணுவ தளங்கள் மட்டுமன்றி விமான நிலையங்களையும் குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனாலும் உக்ரைனில் இருந்து வெளியேறுவோர் எதிர்பார்ப்புகள் கேள்விக்குறியாகி உள்ளன. மேலும் தற்போதைய நிலைமை சீரடைந்து, உக்ரைனின் வான் எல்லைகள் திறக்கப்பட்டால் மட்டுமே விமான சேவைக்கு வாய்ப்பாகும்.
இதனிடையே, கத்தார் வாயிலாக உக்ரைன் இந்தியர்கள் தாயகம் திரும்பலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த தகவலை கத்தாரில் உள்ள இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. கத்தார் - இந்தியா இடையே நடப்பில் உள்ள இருதரப்பு விஷேச ஒப்பந்தம் மூலமாக, கத்தார் அரசாங்கம் இந்தியர்களின் தாயகம் திரும்பலுக்கு உதவும். ஆனால், போரின் மத்தியில் உக்ரைனிலிருந்து இந்தியர்கள் எவ்வாறு கத்தார் செல்வார்கள் என்ற விளக்கம் வெளியாகவில்லை. அவற்றை முடிவெடுத்து உரிய வகையில் செயல்படுத்தும் பொறுப்பு உக்ரைன் அரசு வசம் இருக்கலாம். கத்தார் சென்றடையும் இந்தியர்கள், வழக்கமாக இந்தியாவுக்கு இயக்கப்படும் விமானங்கள் வாயிலாக அங்கிருந்து நாடு திரும்ப முடியும்.