ஏமாற்றமளித்த இந்தியா: உக்ரைன் தூதர் வருத்தம்!


உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்யாவிடம் இந்தியா குரல் எழுப்பும் என எதிர்பார்த்த உக்ரைன் தூதர் இகோர் போலிகா, இவ்விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கும் எனத் தெரிவித்துட்டதால் கடும் ஏமாற்றமடைந்திருக்கிறார். பிரதமர் மோடியையைப் புகழ்ந்துரைத்து, வலிமையான உலகத் தலைவராக இந்தியா இருப்பதாகவும் கூறிய அவர், இந்திய மக்களின் உதவிக்காக மன்றாடுகிறோம் என்றும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தலைநகர் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உங்கள் நாட்டு (வெளியுறவு) அமைச்சகத்தின் இணையதளத்தின் எல்லா அறிக்கைகளையும் - உக்ரைனில் இருக்கும் உங்கள் குடிமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தல் உட்பட - தொடர்ந்து பார்த்துவருகிறேன். உங்கள் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளும் அறிக்கைகளும், நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்துவந்ததைக் காட்டுகின்றன. இந்த நிலைப்பாட்டில் நாங்கள் ஆழ்ந்த அதிருப்தி அடைந்திருக்கிறோம். உன்னிப்பாகக் கவனிப்பது என்றால் என்ன? இப்போது 50 பேர் கொல்லப்பட்டுவிட்டார்கள். நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டால், என்ன நடக்கும்? அதையும் உன்னிப்பாகக் கவனிப்பார்களா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் இகோர் போலிகா

“இந்த நெருக்கடியான சூழலில், இந்திய அரசிடம் இருந்து சாதகமான அணுகுமுறையை எதிர்பார்க்கிறோம். இது உண்மைக்கான தருணம். விதியின் தருணம். நாங்கள் காத்திருக்கிறோம். இந்திய மக்களின் உதவிக்காக மன்றாடுகிறோம்” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவுடன் சிறப்பான, சலுகையுடன் கூடிய, வியூக அடிப்படையிலான உறவைப் பேணும் இந்தியா, அதை இன்னும் துடிப்புடன் பயன்படுத்தி ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாகக் கூறிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உலகின் சக்திவாய்ந்த, மதிப்புமிக்க தலைவர்களுள் ஒருவர். உலகின் வேறு தலைவர்களின் வார்த்தைகளுக்குப் புதின் செவிமடுப்பாரா எனத் தெரியவில்லை. ஆனால், மோடியின் ஆகிருதியைப் பார்க்கும்போது, இவ்விஷயத்தில் அவர் வலுவான குரல் எழுப்பினால், குறைந்தபட்சம் புதின் அதுகுறித்து சிந்திப்பார் எனும் நம்பிக்கை எனக்குள் ஏற்படுகிறது” என்றும் குறிப்பிட்டார்.

“இது எங்கள் பாதுகாப்பு குறித்தது மட்டுமல்ல, உங்கள் சொந்தக் குடிமக்களின் பாதுகாப்பு குறித்ததும்தான்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார். உக்ரைனில் ஏறத்தாழ 15,000 இந்தியர்கள் வசித்துவருகிறார்கள். அவர்களைப் பத்திரமாக வெளியேற்றும் முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டிருக்கிறது.

உக்ரைன் நிலவரம் தொடர்பாக ஆழ்ந்த கவலை தெரிவித்திருக்கும் இந்தியா, பதற்றத்தைத் தணிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஐநாவிடம் கோரிக்கை விடுத்திருக்கிறது. உடனடியாகப் பதற்றத்தைத் தணித்து, அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தடுக்கவில்லையென்றால் அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும் என ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரநிதிநி டி.எஸ்.மூர்த்தி கூறியிருக்கிறார்.

x