உக்ரைன் - ரஷ்ய யுத்தத்தால் உலகப் பொருளாதாரத்துக்கு என்ன நேரும்?


மூன்றாவது உலகப் போர் வெடிக்குமா என்ற அச்சத்தில் உலகமே அதிர்ந்து போய் இருக்கிறது. போர் என்றால் கேட்பதற்கு எளிதாக இருந்தால்கூட அது ஏற்படுத்தப்போகும் அழிவு மிகப் பெரிய பேரழிவாக இருக்கும். உலகமே ஸ்தம்பிக்க வைத்துக்கொண்டிருக்கக் கூடிய நிகழ்வாக ரஷ்யா - உக்ரைன் விவகாரம் ஒவ்வொரு மணி நேரமும் மாறிவருகிறது.

சர்வதேச அளவில் நடக்கும் மாற்றங்கள்

ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுப்பதால் ரஷ்யா மீது பல்வேறு தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கிளர்ச்சியாளர்கள் தனிநாடாக அறிவித்துள்ள டோன்ஸ்டெக் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பகுதிகளில் வர்த்தகம் மேற்கொள்ளவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. அங்கு தங்களது ராணுவத்தை அனுப்பப்போவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டால் எந்த நாட்டின் மீதி விதிக்கப்பட்டதோ அந்நாட்டோடு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய முடியாது. மேலும் சர்வதேச வங்கிக் கணக்குகள் முடக்கப்படும். அமெரிக்கா மட்டுமல்லாமல் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் அரபு நாடுகள் சிலவும் ரஷ்யா மீது தடைகளை விதித்துள்ளன.

என்ன தாக்கம் ஏற்படும்?

ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையால் முதலில் கச்சா எண்ணெய் விலை உயர்வுதான் உடனடி விளைவாக இருந்தது. போர் பதற்றத்தால் கச்சா எண்னெய் விலை 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு பேரலுக்கு 100 டாலர் விலை கடந்தது. இந்தியாவில் இதன் தாக்கம் தெரியவில்லை என்றாலும் உலகளவில் இதன் தாக்கம் மிகப் பெரியதாக உள்ளது. ஆனால் அடுத்த சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயரலாம் எனக் கூறப்படுகிறது.

பங்குச்சந்தையில் நிச்சயமற்ற தன்மை

இந்தியா மற்றும் சர்வதேச அளவில் பங்குச்சந்தை நிச்சயமற்ற தன்மை நிலவிவருகிறது. இன்று ஒரே நாளில் மட்டும் மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 4.72 சதவீதம் வீழ்ச்சியடைந்து 54,529.91 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 4.78 சதவீதம் வீழ்ச்சியடைந்து 16,247.95 என்ற புள்ளியில் வர்த்தகமாகின.

இந்திய பங்குச்சந்தை மட்டுமல்லாமல் சர்வதேச பங்குச்சந்தை குறியீடுகளும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. ஐரோப்பாவின் முக்கிய பங்குச் சந்தை குறியீடான எஸ்டிஓஓஎக்ஸ் (STOXX) 2.75 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. 2021 மே மாதத்துக்குப் பிறகு நடந்த மிகப் பெரிய வீழ்ச்சி இதுவாகும். ஜெர்மனியின் டிஏஎக்ஸ் (DAX) 3.7 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஆசிய பங்குச்சந்தைகளும், அமெரிக்க பங்குச்சந்தைகளும் 2-3 சதவீத வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. பங்கு வர்த்தகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவி வருவதால் அடுத்த சில மாதங்களுக்கும் இந்த வீழ்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை திடீரென உயர்வு

தங்கத்தின் விலை கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்குத் தற்போது உயர்வை கொண்டுள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2.1 சதவீதம் அதிகரித்து 1,949.03 டாலருக்கு விற்பனையானது. கடந்த ஜனவரி 2021-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போதுதான் இந்த விலை எட்டியுள்ளது. சென்னையில் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,240 ரூபாய் உயர்ந்து 38,992 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு தங்கத்தின் விலை இவ்வளவு வேகமாக அதிகரித்திருக்கிறது.

கோதுமை விலை உயருமா?

உலகத்தில் கோதுமையை அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. உக்ரைன் 4-வது இடத்தில் உள்ளது. இந்த இரு நாடுகளும் சேர்ந்து கிட்டத்தட்ட மொத்த கோதுமை ஏற்றுமதியில் 25 சதவீதத்தைக் கொண்டுள்ளன. கோவிட் பெருந்தொற்றால் ஏற்கெனவே கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக ஐநா அறிக்கை வெளியிட்டிருந்தது. தற்போது கோதுமை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் போர் நீடிப்பதால் கோதுமையின் விலை உயர வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். முதலீட்டாளர்கள் மத்தியில் அச்ச சூழல் நிலவுவதால் முதலீடு குறையவும் வாய்ப்புள்ளது.

மெட்டல் பொருட்கள் விலை அதிகரிப்பு

மொபைல் போன் மற்றும் ஆட்டோமேட்டிக் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் பெல்லாடியம் வேதியியல் தனிமத்தின் விலை கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்தத் தனிமத்தை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடு ரஷ்யா. போர் பதற்றத்தால் இந்தத் தனிமத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

உக்ரைன் போர்ப் பதற்றம் அந்நாட்டு மக்களுக்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டது. உக்ரைன் - ரஷ்யா இடையே அமைதி திரும்பவில்லையெனில், அது உலகளவில் மிகப் பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும்!

x