ரஷ்யாவின் போர் நடவடிக்கையின் குறுக்கே யார் வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திப்பார்கள் என உலக நாடுகளுக்கு அதிபர் புதின் மிரட்டல் விடுத்துள்ளார்.
உக்ரைன் மீதான முழுமையான ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டு வருகிறது. கிழக்கு உக்ரைனில் ரஷ்யாவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் சுதந்திர பகுதிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், உக்ரைன் ராணுவம் மற்றும் ராணுவத் தளவாடங்களை குறி வைத்து ரஷ்யாவின் தாக்குதல் மும்முரமாகி உள்ளது. விமான நிலையங்கள், ராணுவ தளங்கள், துறைமுகங்கள் என ராணுவத் தளவாடத்துக்கும், எதிர் தாக்குதலுக்கும் வாய்ப்புள்ள இடங்களை ரஷ்ய ஏவுகணைகள் தாக்கி வருகின்றன.
தங்கள் தாக்குதல் நடவடிக்கையால் மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு எந்த சேதமும் ஏற்படாது என்றும், அதிக சக்தி வாய்ந்த, பாதுகாப்பு அம்சங்கள் கூடிய துல்லிய தாக்குதலை மேற்கொண்டு வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை எனவும் விளக்கமளித்துள்ளது. இந்த வகையில் உக்ரைன் தலைநகர் கியெவ், கிழக்கு உக்ரைனின் டோனஸ்க் மற்றும் கார்கிவ், மைக்கோல், மரியுபோல், ஒடேசா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு ஆளாகி வருகின்றன.
ரஷ்யாவின் முழு தாக்குதல் தொடங்கியதை அடுத்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை தொலைபேசியில் தொடர்புகொண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியுள்ளார். மேலும் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு, அமெரிக்க அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேட்டோ நாடுகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பைடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க ’ஜி 7’ நாடுகளின் அவசர கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
ரஷ்யாவுக்கு எதிராக உலக நாடுகள் கலந்தாலோசித்து வருவதை அடுத்து, தனது ராணுவ நடவடிக்கையில் தலையிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் புதின், ‘ரஷ்யாவின் போர் நடவடிக்கையின் குறுக்கே யார் வந்தாலும் வரலாறு காணாத அழிவை சந்திப்பார்கள்’ என மிரட்டல் விடுத்துள்ளார். ’ரஷ்யாவின் பாதுகாப்பில் எந்த வகையில் சமசரம் கொள்ளப்போவதில்லை’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் முழுவேக தாக்குதல் குறித்து சர்வதேச சமூகத்திடம் முறையிட்டிருக்கும் உக்ரைன், ரஷ்யாவின் அத்துமீறலை தடுத்து உக்ரைன் பாதுகாப்புக்கு உதவுமாறு உலக நாடுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் எந்த வகையில் உதவப்போகின்றன, சர்வதேச சமூகத்தின் அழுத்தத்துக்கு ரஷ்யா மசியுமா போன்றவற்றைப் பொறுத்தே போரின் போக்கும், அதன் பாதிப்புகளின் தீவிரமும் அமைய இருக்கின்றன. இதனிடையே ரஷ்யாவுக்கு எதிரான பதில் தாக்குதலை உக்ரைன் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் 5 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.