ரஷ்யாவின் ஆசி பெற்ற உக்ரைன் பகுதிகளுக்கு வர்த்தக தடை: அமெரிக்கா அதிரடி!


ரஷ்ய ஆதரவு கிழக்கு உக்ரைன் எல்லையில் உக்ரைன் ராணுவ வீரர்

உக்ரைனின் எல்லைக்குட்பட்ட 2 பிராந்தியங்களை சுதந்திரம் பெற்றவையாக ரஷ்யா அறிவித்ததை அடுத்து, அந்த பகுதிகளுடனான வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை அமெரிக்கா துண்டித்துக்கொள்வதாக அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உக்ரைனை முற்றுகையிட்டிருக்கும் ரஷ்யா தனது தாக்குதல் உத்தியின் தொடக்கமாக, கிழக்கு உக்ரைனில் தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் 2 பிராந்தியங்களை, சுதந்திரம் பெற்றவையாக தன்னிச்சை அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு சர்வதேச சமூகங்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. சர்வதேச விதிகளை மீறி பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வதாக ரஷ்யாவை அமெரிக்கா சாடி உள்ளது. உக்ரைனின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் அப்பட்டமான மீறல் நடவடிக்கையை ரஷ்யா தொடங்கி இருப்பதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

கிழக்கு உக்ரைனின் ரஷ்ய ஆதரவு பிராந்திகளுக்கு ’அமைதிப் படைகளை’ அனுப்புவதாகவும் ரஷ்யா அறிவித்துள்ளது. இவ்வாறு உக்ரைன் எல்லைக்குள் ஊடுருவும் ரஷ்யப் படைகள், அங்கு கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிட்டு வரும் உக்ரைன் படைகள் மீது தாக்குதல் நடத்த உள்ளன.

இதற்கிடையே, ரஷ்யாவால் சுதந்திர பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனின் 2 பகுதிகள் மீது புதிய தடைகளை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ரஷ்ய ஆதரவு கிழக்கு உக்ரைனின் 2 பிராந்தியங்களிலும், அமெரிக்கர்கள் வர்த்தக மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் மேற்கொள்வது தடைசெய்யப்படுகிறது. மேலும் அங்குள்ள அமெரிக்காவின் நிதிசார் திட்டங்களும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. ரஷ்யாவின் புதிய அத்துமீறலுக்கு பதிலடி நடவடிக்கையாக இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டமாக ரஷ்யா மீது பொருளாதார தடைவிதிப்பற்காகன பரிசீலனைகளும் தொடர்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. உக்ரைன் மீதான அதிகாரபூர்வ தாக்குதலை ரஷ்யா மேற்கொள்ளும்போது இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம்.

x