இந்தியர் மீட்புக்கான முதல் வந்தே பாரத் விமானம் உக்ரைனுக்கு பறந்தது!


உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நெருக்கடி அதிகரித்திருப்பதன் மத்தியில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் ஏர் இந்தியா விமானம் இன்று(பிப்.22) காலை கிளம்பியது.

மேற்குலக நாடுகளின் அழுத்தத்தையும் மீறி, உக்ரைன் மீது தாக்குதல் தொடுக்க ரஷ்யா தயாராகி வருகிறது. இந்த தாக்குதல் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற சூழலில், அங்குள்ள வெளிநாட்டவர்கள் விரைந்து வெளியேறி வருகின்றனர். முன்னதாக போர் பதற்றத்தை சரியாக கணித்து, தனது குடிமக்களை உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தி இருந்தது. ஆனால் இந்திய தரப்பில் விருப்பமுள்ளோர் இந்தியா திரும்பலாம் என்ற அறிவிப்பே வெளியாகி இருந்தது.

உக்ரைனில் தங்கியிருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள். மருத்துவம் உள்ளிட்ட உயர் கல்விக்காக அங்கே சென்றிருப்பவர்கள். அவர்களை அங்கு அழைத்துச் சென்ற ஏஜெண்டுகள் தவிர்த்து மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கான தொடர்பாளர்கள் உக்ரைனில் குறைவு. இதனால், இந்தியா திரும்புவது குறித்து உரிய முடிவு எடுக்காது மாணவர்கள் தவித்து வந்தனர்.

போர் நெருக்கடி அதிகரித்ததை அடுத்து கடந்த வாரம், உக்ரைனில் உள்ள இந்தியர்களை தற்காலிகமாக வெளியேறுமாறு அங்குள்ள இந்திய தூதரம் மற்றும் டெல்லியில் உள்ள வெளியுறவுத் துறை அமைச்சகம் வாயிலாக அறிவிப்புகள் வெளியாயின. ஆனால் உக்ரைன் - இந்தியா இடையே போதிய விமானப் போக்குவரத்து இல்லாததன் காரணமாக மாணவர்கள் அங்கிருந்து கிளம்புவது மேலும் தாமதமானது.

இதனையடுத்து, பிப்.22, 24, 26 ஆகிய தினங்களில் சிறப்பு விமானங்களை இயக்கி, உக்ரைனில் உள்ள இந்தியர்கள் மீட்கப்படுவர் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. வந்தே பாரத் திட்டத்தின் கீழான இந்த நடவடிக்கையின் மூலம், டாடா குழுமத்தின் கீழுள்ள ஏர் இந்தியா நிறுவனம் சிறப்பு விமானங்களை உக்ரைனுக்கு இயக்க உள்ளது. அதன்படி, உக்ரைனுக்கான முதல் இந்திய விமானம் இன்று காலை கிளம்பியது. 200 இருக்கைகள் கொண்ட இந்த சிறப்பு விமானம், இன்று இரவு டெல்லி திரும்ப உள்ளது.

உக்ரைன் இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வாயிலாக, பல்வேறு ஒருங்கிணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பிரத்யேக தொலைத்தொடர்பு எண்கள், இமெயில் ஆகியவை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், தூதரகம் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகக் கணக்குகளை பின்தொடருமாறும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

x