உக்ரைன் பதற்றத்தைக் குறைப்பதில் முன்னுரிமை: இந்தியா வலியுறுத்தல்


உக்ரைன் விவகாரத்தில் பதற்றத்தைக் குறைப்பதில் உடனடி முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும், ராணுவ நடவடிக்கையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தில் கலந்துகொண்ட இந்தியா வலியுறுத்தியிருக்கிறது.

உக்ரைன் விவகாரம் தொடர்பாக, இன்று தொடங்கியிருக்கும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் அவசரக் கூட்டத்தில் அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உறுப்பு நாடுகள் கலந்துகொண்டிருக்கின்றன. பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், இக்கூட்டம் நடந்துவருகிறது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, “பதற்றத்தைத் தணிக்க சில நாடுகள் எடுத்திருக்கும் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு நாம் இடம் கொடுக்க வேண்டும். முத்தரப்பு தொடர்புக் குழு, நார்மாண்டி வரைவு ஆகியவற்றின் அடிப்படையில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கிறோம். வேறுபட்ட நலன்களைக் கடந்து ஒன்றிணைந்து அதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியிருக்கிறார்.

“உக்ரைன் எல்லையில் நிலவும் பதற்றம் அதிகரிப்பது ஆழ்ந்த கவலையளிக்கும் விஷயம். இந்த நகர்வுகள் அந்தப் பிராந்தியத்தில் அமைதியையும் பாதுகாப்பையும் பின்னடையச் செய்யக்கூடியவை. உக்ரைன் எல்லைப் பகுதிகள் உட்பட அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில், இந்தியாவைச் சேர்ந்த 20,000-க்கும் மேற்பட்ட மாணவர்களும், மக்களும் வசித்துவருகின்றனர். அவர்களின் நலன் எங்களுக்கு மிகவும் முக்கியமானது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

x