சமூக ஊடகங்களில் தடை செய்யப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது சொந்த முயற்சியில் ‘ட்ரூத் சோஷியல்’ எனும் செயலியை நேற்று அறிமுகம் செய்திருக்கிறார். சில தினங்களுக்கு முன்னர் சோதனை ஓட்டம் தொடங்கினாலும், அதிகாரபூர்வமாக நேற்று இந்தச் செயலி அறிமுகமானது. ட்ரம்ப் மீடியா அண்ட் டெக்னாலஜி க்ரூப் (டிஎம்டிஜி) எனும் அவரது சொந்த நிறுவனம் இந்தச் செயலியை உருவாக்கியிருக்கிறது. குடியரசுக் கட்சி முன்னாள் எம்.பி டெவின் நியூன்ஸின் மேற்பார்வையில் இந்தச் செயலி நிறுவனம் இயங்குகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் தோற்ற பின்னர் 2021 ஜனவரி 6-ல் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் உள்ள கேபிட்டல் கட்டிடத்துக்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது வன்முறையைத் தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் அவர் பதிவுகளை எழுதியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து ட்விட்டர், ஃபேஸ்புக், யூட்யூப் ஆகிய சமூக ஊடகங்கள் அவரது சமூகவலைதளக் கணக்குகளைத் தடை செய்தன. இதனால் தனக்கென ஒரு சொந்த சமூக ஊடகத்தை உருவாக்க அவர் உறுதிபூண்டார்!
பல முஸ்தீபுகளுடன் தொடங்கப்பட்டாலும் இந்தச் செயலி பயனாளர்களை ரொம்பவே சோதிக்கிறது என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஏகப்பட்ட பிழைகள், கோளாறுகள், குழப்பங்கள் என எடுத்த எடுப்பிலேயே அவரது சொந்த செயலி சொதப்பியிருக்கிறது. ஆப்பிள் ஆப் ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய இந்தச் செயலி, ஏற்கெனவே ஆர்டர் செய்த ஆப்பிள் செல்போன்களில் தானாகவே பதிவிறக்கம் ஆகிவிட்டது. ஆனால், பல பயனாளர்கள் தங்கள் கணக்கை அதில் தொடங்க முடியாமல் தவித்துப்போய்விட்டார்கள்.
பலர் பல முறை முயன்றபோதும், ‘மிகப் பெரிய அளவில் டிமாண்ட் இருப்பதால், உங்களைக் காத்திருப்புப் பட்டியலில் வைத்திருக்கிறோம்’ என்ற அறிவிப்பு வாசகமே மீண்டும் மீண்டும் அவர்களுக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றையும் தாண்டி, இன்றைக்கு ஆப் ஸ்டோரில் இலவச செயலிகளின் பட்டியலில் முன்னணி இடத்தை இந்தச் செயலி பிடித்திருக்கிறது. எந்த வித தணிக்கையும் இருக்காது என்பது இந்தச் செயலியின் தனிச்சிறப்பு.
ட்விட்டரின் சாயலிலேயே ட்ரூத் சோஷியல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. பதிப்புரிமை மீறலில் ஈடுபட்டதாக அதன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ட்விட்டர் நிறுவனம் எதையும் தெரிவிக்கவில்லை.
மார்ச் மாத இறுதிக்குள் முழுமையாக இந்தச் செயலியைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது தங்கள் லட்சியம் என்றும், குறைந்தபட்சம் அமெரிக்காவில் முழுமையாகப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயற்சிப்பதாகவும் டெவின் நியூன்ஸ் கூறியிருக்கிறார். முன்னதாக, பயனாளர்கள் அதிகமாகப் பிறரின் கணக்குகளைப் பின்தொடர வேண்டும் என்றும், படங்களையும் காணொலிகளையும் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று நியூன்ஸ் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தச் செயலியில் கணக்கு தொடங்கியிருக்கும் கத்தோலிக்க பாதிரியார் ஒருவரை வரவேற்ற நியூன்ஸ், மேலும் பல பாதிரியார்களை இந்தச் செயலியில் சேர்க்குமாறு அவருக்கு வேண்டுகோளும் விடுத்தார். ஆரம்பகட்டக் கோளாறுகளைத் தாண்டி ட்ரூத் சோஷியல் செயலி ட்ரம்பின் புகழ் பரப்ப உதவுமா என்பது போகப்போகத் தெரியும்!