நிலவில் மோதவிருக்கும் ராக்கெட் எங்களுடையது அல்ல - சீனா மறுப்பு


சீனாவின் நிலவு ஆய்வுத் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட ராக்கெட்டின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் மோதும் எனச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெடித்துச் சிதறிய ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டின் உடைந்த பாகங்களில் ஒன்று நிலவில் மோதவிருப்பதாக விண்வெளி ஆராய்ச்சி நிபுணர்கள் முன்பு கூறியிருந்தனர். அது எலான் மஸ்க், 2015-ல் ஏவிய ராக்கெட் ஆகும்.

ஆனால், நிலவில் மோதவிருக்கும் உடைந்த பாகங்கள், சீனா 2014-ல் அனுப்பிய ‘சேஞ்ச் 5 டி1’ திட்டத்துக்கான ராக்கெட்டின் பூஸ்டருடையவை எனத் தற்போது தெரியவந்திருக்கிறது. மார்ச் 4-ல் நிலவின் மேற்பரப்பில் அந்த பாகங்கள் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்தத் தகவலை சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்திருக்கிறது. பூஸ்டர் புவியின் வளிமண்டலத்தில் நுழைந்து, முற்றாக எரிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.

விண்வெளி வல்லரசு தேசமாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள பெரும் செலவில் திட்டங்களை வகுத்துவரும் சீனா, டியாங்கோங் எனும் பெயரில் புதிய விண்வெளி மையத்தை நிறுவி, 2021 ஏப்ரல் 21 முதல் செயல்பாட்டுக்குக் கொண்டுவந்திருக்கிறது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுத்திருக்கும் சீனா, ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்திவருகிறது. நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திலும் சீனா இருப்பது குறிப்பிடத்தக்கது!

x