ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனஅழிப்பு குற்றங்கள்: மீண்டும் விசாரணையைத் தொடங்கும் சர்வதேச நீதிமன்றம்


வங்கதேசத்துக்குத் தப்பியோடும் ரோஹிங்யா முஸ்லிம்கள்

2017-ல், மியான்மரில் வங்கதேச எல்லையில் உள்ள ராக்கைன் மாகாணத்தில் வசித்துவந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது பெரும்பான்மையினரான பவுத்தர்கள் ராணுவம் மற்றும் போலீஸாரின் துணையுடன் வன்முறையை ஏவினர். படுகொலைகள், பாலியல் வன்முறை, ஒட்டுமொத்த கிராமத்தையும் எரிப்பது என இன அழிப்பு நோக்கில் நடந்த அந்த வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து 7 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள், அண்டை நாடான வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.

இது தொடர்பாக, காம்பியா தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றத்தில் 2019 டிசம்பரில் விசாரணை நடந்தது. அப்போது மியான்மர் ராணுவத்தின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரானவர் அமைதிக்கான நோபல் விருது பெற்ற ஆங் சான் சூச்சி.

சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மர் ராணுவத்துக்கு ஆதரவாக ஆஜராகி விளக்கமளிக்கும் ஆங் சான் சூச்சி

நிலவரம் சிக்கலாக இருந்ததாகவும், ரோஹிங்யா கிளர்ச்சிக்காரர்கள் நடத்திய தாக்குதலுக்கு மியான்மர் ராணுவம் பதிலடி கொடுத்ததாகவும் ஆங் சான் சூச்சி நீதிமன்றத்தில் கூறியது சர்வதேச சமூகத்தை அதிர்ச்சியடைய வைத்தது. “தவறுசெய்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ராணுவ வீரர்கள், அதிகாரிகள் தொடர்பாக விசாரணை நடத்தி, தண்டனை வழங்கும் அரசுக்கு இனஅழிப்பு நோக்கம் இருக்க முடியுமா?” என்றெல்லாம் மியான்மர் ராணுவத்துக்கும் அரசுக்கும் வக்காலத்து வாங்கினார் அப்போது ஸ்டேட் கவுன்சிலராக (பிரதமருக்கு நிகரான பதவி) இருந்த ஆங் சான் சூச்சி.

எனினும், அந்த விசாரணை நடந்து ஒரு மாதத்துக்குப் பின்னர், மியான்மர் அரசு மீளமுடியாத அளவுக்கு மோசமான சேதத்தை ரோஹிங்யாக்களின் உரிமைகளில் ஏற்படுத்தியதாகக் கூறிய சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதி அப்துல்காவி அஹ்மது யூசுப், ரோஹிங்யா மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு மியான்மர் அரசுக்கு உத்தரவிட்டார். தலைமைத் தளபதியாக இருந்த மின் ஆங் லாய்ங் உள்ளிட்ட 6 ராணுவ அதிகாரிகள் மீது விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுதொடர்பான விசாரணை இன்று (பிப்.21) மீண்டும் தொடங்குகிறது. ஒருவார காலத்துக்கு இந்த வழக்கு விசாரணை நடைபெறும். இன அழிப்பு குற்றம் தொடர்பான மியான்மர் அரசின் முதற்கட்ட ஆட்சேபங்கள் குறித்து நீதிமன்றம் விசாரிக்கவிருக்கிறது.

இதற்கிடையே, இந்த வழக்கில் மியான்மர் அரசின் சார்பாக யார் ஆஜராவது என்பது குறித்து சர்ச்சை நிலவுகிறது. காரணம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகிவிட்டது. தலைமைத் தளபதியாக இருந்த மின் ஆங் லாய்ங் தான் இன்று மியான்மரின் ஆட்சியாளர்.

தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டிவந்த ராணுவம், 2021 பிப்ரவரி 1-ல், மியான்மரின் ஆட்சிப்பொறுப்பைக் கைப்பற்றியது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களைக் கைதுசெய்து வீட்டுச் சிறையில் அடைத்தது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டியது, உரிமம் இல்லாத வாக்கி-டாக்கி வைத்திருந்தது, 2020 தேர்தல் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஆங் சான் சூச்சி மீது சுமத்தப்பட்ட நிலையில், இரு வழக்குகளில் அவருக்கு 4 ஆண்டுகள் மற்றும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இன்றைய சூழலில், அவர் வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அனுபவிப்பார் என்றே தெரிகிறது.

மறுபுறம், ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மர் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறார்கள். அவர்கள் மீது ராணுவம் வன்முறையை ஏவிவிட்டிருக்கிறது. இதுவரை 1,500-க்கும் அதிகமான பொதுமக்களும், போராட்டக்காரர்களும் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். சிறுபான்மையினரான ரோஹிங்யா முஸ்லிம்களும் ராணுவ ஆட்சியில் மிகுந்த துயரத்துக்குள்ளாகியிருக்கின்றனர். ராக்கைன் மாகாணத்தில் எஞ்சியிருக்கும் 6 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யாக்கள் மீது கடும் அடக்குமுறையை மேற்கொள்கிறது ராணுவம்.

ராணுவத்தால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தேசிய ஒற்றுமை அரசு (என்யூஜி), இதற்கு முன்பு சர்வதேச நீதிமன்றத்தில் அரசு முன்வைத்த ஆட்சேபங்களைத் திரும்பப் பெறுவதாகவும், விசாரணை முழுமையாக நடைபெற வேண்டும் என்றும் கூறியிருக்கிறது.

சர்வதேச நீதிமன்றம்

ஆங் சான் சூச்சியால் ஐநாவுக்கான மியான்மர் தூதராக நியமிக்கப்பட்ட க்யாவ் மோ துன் இன்றுவரை அந்தப் பதவியில் நீடிக்கிறார். அவர்தான் மியான்மர் அரசின் சார்பில் ஆஜராக வேண்டும் என்று தேசிய ஒற்றுமை அரசு வலியுறுத்துகிறது.

யார் ஆஜரானாலும் சரி, விசாரணை முழுமையாக நடைபெற்று, ரோஹிங்யாக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதுதான் மனித உரிமை அமைப்புகளின் ஒரே கோரிக்கை. யார் ஆஜராவது என்பதில் நிலவும் முரண்களால் ரோஹிங்யாக்களுக்கு நீதி கிடைப்பது திசைமாறிவிடக் கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்திவருகிறார்கள்.

x