உக்ரைனில் உள்ள இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு இந்தியா அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் தேசத்தை முற்றுகையிட்டிருக்கும் ரஷ்ய துருப்புகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களை உடனடியாக வெளியேறுமாறு அந்நாட்டில் செயல்படும் இந்திய தூதரகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைனில் போர் நெருக்கடி அதிகரித்திருப்பதை அடுத்து இந்த எச்சரிக்கையை தனது குடிமக்களுக்கு இந்தியா விடுத்துள்ளது. முன்னதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடுமக்களை உக்ரைனிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தியபோது, இந்தியா தரப்பில் அதன் குடிமக்களுக்கு அழுத்தம் தரப்படவில்லை. விருப்பமுள்ளோர் இந்தியா திரும்பலாம் என்றே தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது உக்ரைன் மீதான தாக்குதலில் ரஷ்யா தீர்மானமாக உள்ளதால், இந்தியர்களை வெளியேறுமாறு உக்ரைனில் அமைந்திருக்கும் இந்திய தூதரகம் சார்பில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. உக்ரைனில் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விகளை பெறுவதற்கான இந்திய மாணவர்கள் ஏராளமாக தங்கி உள்ளனர். அவர்கள் தங்களுக்கான முகவர்களை தொடர்புகொண்டு விமான வசதி தொடர்பான விவரங்களை கேட்டுப்பெறுமாறும் அறிவுறுத்தபட்டுள்ளது.
மேலும் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம், உக்ரைனின் இந்திய தூதரகம் ஆகியவற்றின் இணையதளங்கள், சமூக ஊடக கணக்குகள் ஆகியவற்றின் மூலம் தேவையான வழிகாட்டுதல் மற்றும் உதவிகளைப் பெறுமாறும் அறிவுறுத்தல்கள் வழங்கபட்டுள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சகம் வாயிலாக பிப்.22, 24, 26 ஆகிய தினங்களில் உக்ரைனிலிருந்து இந்தியர்களை வெளியேற்றுவதற்கான சிறப்பு ஏர் இந்தியா விமானங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
இதற்கிடையே கடைசிக்கட்ட முயற்சியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ரஷ்ய அதிபர் புதினை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருக்கும் சுமார் ஒன்றரை லட்சம் ரஷ்ய படைவீரர்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் போர் முனைப்பில் உள்ளன.