உக்ரைன் - ரஷ்யா நெருக்கடி: அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர ஆலோசனை


வெள்ளை மாளிகை

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தயாரான சூழலில் அமெரிக்க பாதுகாப்பு சபையைக் கூட்டி அதிபர் ஜோ பைடன் இன்று(பிப்.20) விவாதிக்க உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

உக்ரைன் எல்லையில் முகாமிட்டு போர்ப் பயிற்சிகளில் தீவிரமாக இருக்கும் ரஷ்யா குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன. உக்ரைனை ரஷ்யா எப்போது வேண்டுமானாலும் தாக்கும் என்ற கணிப்புகளை ஒரு வாரத்துக்கும் மேலாக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அவற்றை முற்றிலுமாக மறுத்து வரும் ரஷ்யா, வழக்கமான போர்ப் பயிற்சிகள் முடிவடைந்தது தங்களது துருப்புகள் பாசறைக்கு திரும்பி வருவதாக தெரிவித்து வருகிறது.

ஆனால், உக்ரைன் எல்லையில் இருக்கும் ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை அதிரித்து வருவதையும், ஆயுத தளவாடங்கள் குவிக்கப்பட்டு வருவதையும் செயற்கைக்கோள் தரவுகளின் அடிப்படையில் அமெரிக்கா அறுதியிட்டு வருகிறது. இதற்கிடையே ஐரோப்பிய நாடுகள் சார்பில் ரஷ்யாவை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தன.

இந்நிலையில் ரஷ்யா தனது போர்ப் பயிற்சிகளின் அங்கமாக, அணு ஆயுதம் தாங்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகளை நேற்று ஏவி சோதனை மேற்கொண்டது. இவை அனைத்தும் ரஷ்ய அதிபர் புதினின் நேரடி பார்வையில் நடைபெற்றன. மேலும், ரஷ்யாவின் நட்பு தேசமான சீனாவில் நடைபெற்று வரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைவதற்காக உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தள்ளிப்போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இன்றைய தினம் பெய்ஜிங் ஒலிம்பிக் நிறைவடைவதை முன்னிட்டு, உக்ரைன் மீதான தாக்குதலுக்கு ரஷ்யா தயாராகி விட்டதாகவும் இந்த சர்வதேச கணிப்புகள் விவரிக்கின்றன.

இந்த போர் பதட்ட சூழலின் மத்தியில், உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா தாக்குதலைத் தொடங்கும் என்று அறிவித்துள்ள அமெரிக்கா, அவசர கால நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தயாராகிறது. அதற்காக பாதுகாப்பு சபையின் கூட்டத்தையும் அதிபர் ஜோ பைடன் இன்று கூட்டி விவாதிப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவது, போர்ப் பயிற்சிகளை அளிப்பது ஆகியவற்றுக்கு அப்பால், நேரிடையாக போரில் பங்கெடுப்பது இல்லை என்பதாக தனது நிலைப்பாட்டினை முன்னதாக அமெரிக்கா தெளிவுபடுத்தி இருந்தது. ’தற்போது அதில் மாற்றம் எதுவும் உண்டா, அமெரிக்க உளவுத் துறையின் தகவல்கள் அடிப்படையில் எட்டப்பட வேண்டிய புதிய முடிவுகள் என்ன’ ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

x