இந்தியா - அரபு அமீரகம் இடையே இருதரப்பு பொருளாதார கூட்டு ஒப்பந்தம் நேற்று (18 பிப்., ) கையெழுத்தானது. அடுத்த ஐந்தாண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை 10 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இடையில் நடைபெற்ற ஆன்லைன் மாநாட்டில் இந்த ஒப்பந்தம் முடிவானது.
பொருளாதாரம், பருவநிலை மாற்றம் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு, தொழிற்துறை மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள், குறைந்த கார்பன் ஹைட்ரஜன் வளர்ச்சி மற்றும் முதலீடுகள், உணவு பாதுகாப்பு, நிதி சேவைகள் மற்றும் கல்வி கூட்டுறவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் புரிந்துணர்வும் ஒப்பந்தமும் கையெழுத்தாகி உள்ளன. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியா - அரபு அமீரகம் இடையில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் பல்வேறு திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. படைப்பூக்கத்தையும் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கக்கூடிய உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை நிறுவ வேண்டிய அவசியம் இருப்பது உணரப்பட்டது. ஆகவே இரு நாட்டுத் தலைவர்களும் இணைந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தை தொடங்க முடிவெடுத்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் சட்டம், 1961கீழ் ஐஐடி என்னும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியாவில் தொடங்கப்பட்டன. இதுவரை 23 ஐஐடி-கள் இந்தியாவில் உள்ளன. இந்நிலையில், முதன்முறையாக ஐஐடி அயல்நாட்டில் தொடங்கப்படுவதும் அதிலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுவப்படவிருப்பதும் வரலாற்று நிகழ்வாகக் கருதப்படுகிறது.