கூகுள் வழங்கும் வேலைவாய்ப்புப் பயிற்சி: சுந்தர் பிச்சையின் சூப்பர் திட்டம்!


சுந்தர் பிச்சை

படித்த இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் திறனை வளர்த்துக்கொள்ளவும் அதிக ஊதியம் தரும் வேலைகளில் சேரவும் தொழில்முறை சான்றிதழ் பயிற்சி அளிக்க புதிய திட்டத்தை அறிவித்திருக்கிறார் ஆல்ஃபாபெட் – கூகுள் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை. இதற்கு முதல் கட்டமாக நிறுவனம் சார்பில் 10 கோடி டாலர்கள் (750 கோடி ரூபாய்) அவர் ஒதுக்கியிருக்கிறார்.

தரவு ஆய்வாளர்கள், தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள், திட்ட மேலாண்மை அதிகாரிகள், பயனீட்டாளர் அனுபவங்களை வடிவமைப்பவர்கள் என்று பல்வேறு வேலைகளுக்கும் பயனுள்ளதாக இந்தச் சான்றிதழ் படிப்பு இருக்கும். அமெரிக்காவைச் சேர்ந்த 20,000 தொழிலாளர்களுக்கு இந்தச் சான்றிதழ் பயிற்சி அளிக்கப்படும். 10 கோடி டாலர்கள் செலவில் இந்தப் பயிற்சி தரப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக 100 கோடி டாலர் சம்பளப் பலன் ஊழியர்களுக்குக் கிடைக்கும் என சுந்தர் பிச்சை நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இது ஆல்ஃபாபெட், கூகுள் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளை, புதிதாக வேலைக்குச் சேருவோருக்கு அளிக்கும் என்பதால் இந்தச் சான்றிதழ் வைத்துள்ளவர்கள் கூகுள் போன்ற பெரிய நிறுவனங்களில் உடனடியாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

இந்தச் சான்றிதழ் பயிற்சி ஏற்கெனவே அளிக்கப்பட்டு 70,000 அமெரிக்கர்கள் பயன் அடைந்துள்ளனர். இதன் வெற்றியை அடுத்தே மேலும் 20,000 அமெரிக்கர்களுக்குப் பயிற்சி அளிக்க 10 கோடி டாலர்களை ஒதுக்கியுள்ளனர். இந்தப் பயிற்சியில் சேர கல்லூரிகளில் படித்த பட்டமோ வேறு தகுதிகளோ அவசியம் இல்லை. ஆர்வம் இருந்தால் போதும். ஏற்கெனவே இந்த சான்றிதழ் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், தங்களுடைய தொழில்திறன் நன்கு வளர்ச்சியடைந்ததாகவும் எந்த நிறுவனத்திலும் எளிதில் வேலைவாங்கிவிட முடியும் என்ற தன்னம்பிக்கையை அளித்ததாகவும் பயிற்சியின் வலிமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே செய்துவரும் வேலைகளில் திறமையைக் கூட்டி அதிக ஊதியம் பெறுவதுடன், புதிதாக வேறிடங்களிலும் வேலையைப் பெற முடிகிறது என்கின்றனர்.

அமெரிக்கர்களுக்குச் சான்றிதழ் வழங்கும் இந்தப் பயிற்சித் திட்டத்தை சுந்தர் பிச்சை நேற்று (பிப்.17) அறிவித்தபோது அமெரிக்க வணிகத் துறை துணையமைச்சர் அலஜாந்திர காஸ்டிலோ உடன் இருந்தார். “முப்பதாண்டுகளுக்கு முன்னதாக ஒரு லட்சியத்தோடும் நம்பிக்கையோடும் அமெரிக்கா வந்தேன். அது வீண் போகவில்லை. அதே நம்பிக்கையும் லட்சியமும் பிற இளைஞர்களுக்கும் ஏற்பட ஏதாவது செய்ய வேண்டும் என்ற விருப்பத்தின் பேரிலேயே இந்த சான்றிதழ் பயிற்சி வகுப்பைச் சிந்தித்தேன்” என்று சுந்தர் குறிப்பிடுகிறார்.

கூகுள் நிறுவனத்தால் அளிக்கப்பட்ட பல்வேறு பயிற்சிகளால் அமெரிக்காவின் 50 மாநிலங்களில் இதுவரை 80 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர். கூகுள் பயிற்சி சான்றிதழ் வைத்திருக்கும் இளைஞர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள 150-க்கும் அதிகமான பெரு நிறுவனங்கள் அமெரிக்காவில் தயாராகவுள்ளன. இந்தப் பயிற்சி பெறும் இளைஞர்கள் தாங்கள் பெறும் சான்றிதழ்க்கான கட்டணத்தை, ஆண்டுக்கு 40,000 டாலர் என்ற அளவில் வேலை கிடைத்த பிறகு கூகுளுக்குத் திருப்பிச் செலுத்தினால் போதும் என்பது இந்த திட்டத்தின் முக்கியமான சிறப்பு அம்சமாகும்.

கல்லூரிகளில் பெறும் பட்டங்கள் மிகச் சில துறைகளில் தான் உடனடியாக வேலைவாய்ப்புக்கு உதவுகின்றன. எஞ்சியவை நடப்பு உற்பத்தி முறைகளுக்கு ஏற்றதாக இருப்பதில்லை. எனவே எந்தப் பட்டதாரியும் கூடுதலாக சில சான்றிதழ் படிப்புகளையும் முடித்து வைத்துக்கொள்வது, சந்தையில் எளிதில் போட்டியிட்டு வேலை பெற உதவுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆண்டுக்காண்டு தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படுகிறது. அதையெல்லாம் அறியவும் தொடர்பில் இருக்கவும் தொடர் பயிற்சி அவசியம். இதை கூகுள் நிறுவனத்தார் உணர்ந்து, தொடர்ந்து சான்றிதழ் வகுப்புகள் மூலம் பயற்றுவிப்பது பிற நிறுவனங்களும் பின்பற்றத்தக்க பாடமாகும்.

x