மலாவியில் போலியோ தாக்குதல்: 5 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்பிரிக்காவில் முதல் முறை


தென்கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் போலியோ வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. தலைநகரான லிலோங்வேயில் ஒரு குழந்தைக்குப் போலியோ வைரஸ் கண்டறியப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது.

மலாவி குழந்தையிடம் கண்டறியப்பட்ட போலியோ வைரஸ், பாகிஸ்தானில் கண்டறியப்பட்ட வைரஸுடன் தொடர்புடையது. பாகிஸ்தானில் இன்று வரை போலியோ ஒரு வட்டாரத் தொற்றாக இருக்கிறது.

2020 ஆகஸ்ட் மாதத்தில், போலியோவிலிருந்து ஆப்பிரிக்கா விடுபட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டிருப்பது அந்த நிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடாது என உலக சுகாதார நிறுவனம் கூறியிருக்கிறது.

ஆப்பிரிக்காவில் கடைசியாக போலியோ வைரஸ் கண்டறியப்பட்டது, 2016-ல் நைஜீரியாவின் வடக்குப் பகுதியில்தான். 2021 நிலவரப்படி உலகில் 5 பேருக்குத்தான் போலியோ தாக்குதல் இருந்தது.

இந்நிலையில், “உலகின் எந்தப் பகுதியில் போலியோ வைரஸ் இருந்தாலும், அது எல்லா நாடுகளுக்கும் அச்சுறுத்தல்தான் என உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்கப் பிராந்திய இயக்குநர் டாக்டர் மட்ஷிடிஸோ மொய்ட்டி கூறியிருக்கிறார். “மலாவியில் போலியோ தாக்குதல் கண்டறியப்பட்ட நிலையில், அது பரவுவதைத் தடுக்க முன்கூட்டியே அவசர நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம்” என அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

x