இரண்டாம் உலகப் போரின்போது இந்தோனேசியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறை: மன்னிப்பு கோரிய நெதர்லாந்து


நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே

இரண்டாம் உலகப் போரின் முடிவில், நெதர்லாந்து தனது முன்னாள் காலனி நாடான இந்தோனேசியாவை மீண்டும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக, அந்நாட்டின் மீது திட்டமிட்ட, மிக மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்ததாக சமீபத்தில் ஓர் ஆய்வறிக்கை வெளியானது.

1945-49 காலகட்டத்தில் கிராமங்களை எரித்தது, பெருவாரியான எண்ணிக்கையில் மக்களைச் சிறையில் அடைத்தது, சித்திரவதை, மரண தண்டனை என டச்சு (நெதர்லாந்து) ராணுவம் இந்தோனேசிய மக்களைக் கொடுமைக்குள்ளாக்கியதாக நெதர்லாந்து மற்றும் இந்தோனேசிய வரலாற்று ஆய்வாளர்கள் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்றைய சூழலில் அவை அனைத்தும் போர்க்குற்றங்களாகக் கருதப்படுகின்றன. 2017 முதல் நான்கரை ஆண்டுகள் இந்த ஆய்வு நடந்திருக்கிறது. நெதர்லாந்துதான் இந்த ஆய்வுக்கான நிதியையும் வழங்கியிருக்கிறது.

இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இந்தோனேசிய வீரர்கள்

பல ஆண்டுகாலம் நெதர்லாந்தின் காலனி நாடாக இருந்த இந்தோனேசியாவை இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், ஜப்பான் கைப்பற்றியிருந்தது. அந்தப் போரில் ஜப்பான் தோற்கடிக்கப்பட்ட பின்னர் 1945-ல் இந்தோனேசியா சுதந்திர நாடானது. எனினும், மீண்டும் இந்தோனேசியாவைத் தனது பிடிக்குள் கொண்டுவர முயற்சித்த நெதர்லாந்து, அந்நாட்டினர் மீது கடும் வன்முறையைப் பிரயோகித்தது. இந்தோனேசியாவின் விடுதலை வீரர்கள் டச்சு ராணுவத்தை எதிர்த்து தீரத்துடன் போரிட்டனர். எனினும், நெதர்லாந்து நிகழ்த்திய கொடூர வன்முறையால் 1 லட்சத்துக்கும் அதிகமான இந்தோனேசியர்கள் கொல்லப்பட்டனர். 1949-ல் நெதர்லாந்து இந்தோனேசியாவை விட்டு வெளியேறியது.

அதே காலகட்டத்தில் இந்தோனேசியப் படைகளும் வன்முறையில் ஈடுபட்டதை இந்த ஆய்வு பதிவுசெய்திருக்கிறது. இந்த மோதலின் ஆரம்ப கட்டத்தில் யுரேஷியர்கள், மோலுக்கர்கள், இதர சிறுபான்மையினர் என ஏறத்தாழ 6,000 பேரை இந்தோனேசியப் படைகள் கொன்றனர் என இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்தோனேசியாவில் டச்சு ராணுவம் நிகழ்த்திய வன்முறைகள் குறித்து இதற்கு முன்பும் புகார்கள் எழுந்ததுண்டு. எனினும் வரலாற்று ரீதியாக ஆய்வுகள் நடத்தப்பட்டு விரிவான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. இவ்விஷயத்தில் டச்சு ராணுவம், சிவில் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் நடந்துகொண்டதைப் போலவே, நெதர்லாந்து அரசியல் தலைவர்களும் அலட்சியம் காட்டினர் என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்ஸாண்டர்

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே இந்தோனேசிய மக்களிடம் மன்னிப்பு கோரியிருக்கிறார். இதுதொடர்பாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வெட்ககரமான அந்த உண்மைத் தகவல்களை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். டச்சு அரசின் சார்பில் இந்தோனேசிய மக்களிடம் நான் ஆழ்ந்த மன்னிப்பைக் கோருகிறேன்” என்று அவர் கூறினார்.

2020-ல் இந்தோனேசியாவுக்குச் சென்றிருந்த நெதர்லாந்து அரசர் வில்லியம் அலெக்ஸாண்டர், டச்சு வன்முறைச் சம்பவங்களுக்காக அந்நாட்டு மக்களிடம் வருத்தம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x