‘யமனா மொழி’ பேசிய கடைசி நபர் மறைவு: வழக்கொழியும் சிலே பூர்வகுடி மொழி


கிறிஸ்டினா கால்டிரோன்

யகான் பூர்வகுடி சமூகத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா கால்டிரோன் எனும் 93 வயது மூதாட்டி, பிப்ரவரி 16-ல் காலமானார்.

சிலே நாட்டின் புவெர்ட்டோ வில்லியம்ஸ் நகரின், புறநகர்ப் பகுதியில் யகான் சமூகத்தினர் உருவாக்கிய வில்லா உகிகா எனும் சிறுநகரத்தில் ஓர் எளிய வீட்டில் வசித்துவந்த அவர், காலுறைகளை நெய்து விற்பனை செய்துவந்தார்.

தென்னமெரிக்க நாடான சிலேயின், பூர்வகுடி மொழிகளில் ஒன்றான ‘யமனா மொழி’ பேசும் கடைசி நபராக அறியப்பட்டவர் கிறிஸ்டினா. அவரது மறைவால், அம்மொழி முற்றாக வழக்கொழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. 2003-ல் அவரது சகோதரி காலமானார். அதன் பின்னர், அவருடன் அந்த மொழியைப் பேசக்கூடிய நபர் இல்லாமல், அந்த மொழி பேசும் கடைசி நபராக கிறிஸ்டினா அறியப்பட்டார்.

யகான் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் குறைந்த எண்ணிக்கையில் இப்போதும் வாழ்ந்துவந்தாலும், காலப்போக்கில் அந்தச் சமூகத்தினர் யமனா மொழி பேசுவதைக் கைவிட்டுவிட்டனர். அந்த மொழியின் வார்த்தைகளின் தோற்றத்தை நிர்ணயிப்பது கடினமானதாகக் கருதப்பட்டதால், அது தனிமைப்படுத்தப்பட்ட மொழியாகக் கருதப்பட்டது.

“என் தாயின் மறைவுடன் எங்கள் சமூகத்து மக்களின் கலாச்சார நினைவும் மறைந்துவிட்டது” என, கிறிஸ்டினாவின் மகள் லிடியா கான்ஸலஸ் ட்வீட் செய்திருக்கிறார். சிலே நாட்டுக்குப் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவில் லிடியாவும் ஒருவர்.

கிறிஸ்டினாவின் முயற்சியால், யமனா மொழி வார்த்தைகளுக்கு ஸ்பானிய மொழியில் பொருள் தரும் அகராதி உருவாக்கப்பட்டது. அந்த வகையில் யமனா மொழி பாதுகாக்கப்பட்டிருப்பதாக லிடியா கூறியிருக்கிறார்.

x