சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு குறித்த புகழுரையுடனும், இன்றைய இந்தியா குறித்த விமர்சனப் பார்வையுடனும் சிங்கப்பூர் பிரதமர் லீ ஸியென் லூங் நேற்று உரையாற்றியிருந்தார். இந்நிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதருக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பியிருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்.
தொழிலாளர் கட்சியின் முன்னாள் எம்.பி ரேஸியா கான் தவறான தகவல்களைக் கூறியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்த சிறப்புரிமைக் குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தில் பேசிய அவர், “சுதந்திரத்துக்காகப் போராடிய தலைவர்கள், பெரும் துணிச்சல், மகத்தான கலாச்சாரம், மிகச் சிறந்த திறன் கொண்ட விதிவிலக்கான தனிநபர்கள். நெருப்பின் சிலுவையைத் தாண்டி, மக்களின், தேசங்களின் தலைவர்களாக ஆனவர்கள். அவர்களில் டேவிட் பென் குரியோன்களும், ஜவாஹர்லால் நேருக்களும் உண்டு. நம் நாட்டின் இரு தலைவர்களும் உண்டு” என்று குறிப்பிட்டார்.
“ஊடகச் செய்திகளின்படி, நேருவின் இந்தியாவில், மக்களவையின் எம்.பி-க்களில் ஏறத்தாழ பாதி பேர் மீது பாலியல் குற்றம், கொலைக் குற்றம் உள்ளிட்ட குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் பல குற்றச்சாட்டுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை எனச் சொல்லப்படுவது வேறு விஷயம்” என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில், இந்தியாவுக்கான சிங்கப்பூர் தூதருக்கு இது தொடர்பாக சம்மன் அனுப்பியிருக்கிறது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம். “சிங்கப்பூர் பிரதமரின் கருத்துக்கள் அநாவசியமானவை” என இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.