‘உக்ரைனை ரஷ்யா ஊடுருவினால் இந்தியா எங்கள் பக்கம் நிற்கும்’ - அமெரிக்கா நம்பிக்கை!


அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ்

உக்ரைனை ரஷ்யா ஊடுவினால், சட்டரீதியான சர்வதேச ஒழுங்குக்குக் கட்டுப்படும் நாடான இந்தியா தங்கள் பக்கம் நிற்கும் என அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ், ரஷ்யா - உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்து முடிந்த குவாட் அமைப்பின் கூட்டத்தில், அதில் அங்கம் வகிக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், அமெரிக்க நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவித்தார்.

அதில், உக்ரைன் விவகாரத்தில் ராஜதந்திர ரீதியிலும், அமைதியான முறையிலும் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியான ஒருமித்த கருத்து எட்டப்படதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“சட்ட அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவது குவாட் அமைப்பின் முக்கியமான நோக்கங்களில் ஒன்று. சட்ட அடிப்படையிலான ஒழுங்கு என்பது ஐரோப்பாவில் எப்படி பொருத்தமானதோ, அப்படித்தான் இந்தோ- பசிபிக் பகுதியிலும் பொருத்தமானது. எல்லா பகுதியிலும் அப்படித்தான். நமது கூட்டாளியான இந்தியா சட்ட அடிப்படையிலான சர்வதேச ஒழுங்குக்குக் கட்டுப்பட்ட நாடு. அந்த ஒழுங்கின் கீழ், பல கோட்பாடுகள் உள்ளன. ராணுவ நடவடிக்கையின் மூலம் எல்லைகள் மறுவரை செய்யப்படக்கூடாது என்பது அவற்றில் ஒன்று” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியா உள்ளிட்ட தனது அண்டை நாடுகளிடம் சீனா காட்டும் ஆக்கிரமிப்பு போக்கு குறித்துப் பேசிய அவர், இந்தோ - பசிபிக் பகுதியில் சீனாவின் ராணுவத் தந்திர நடவடிக்கைகள் அதிகரித்துவருகின்றன என்றும், இந்தியா, அமெரிக்கா மற்றும் பல உலக நாடுகள், அந்தப் பிராந்தியத்தை சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் வளர்ச்சிப் பாதையில் நடைபோடும் பிராந்தியமாக மாற்றுவதை உறுதிசெய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

2018 அக்டோபரில் 5 பில்லியன் டாலர் மதிப்பில், ஏவுகணைகள் உள்ளிட்ட ராணுவத் தளவாடங்களை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்ய அந்நாட்டுடன் இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு எச்சரித்ததையும் மீறி அதில் இந்தியா கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

x