உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா தனது படைகளைத் திரும்பப் பெறுவதாக வெளியான தகவல் தவறானது என அமெரிக்கா தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பாக, அதிபர் ஜோ பைடன் அரசின் மூத்த அதிகாரி ஒருவர், நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது, “உக்ரைன் எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவதாக ரஷ்ய அரசு நேற்று அறிவித்தது. அந்த அறிவிப்பின் மூலம் இங்கும் உலகம் முழுவதும் அவர்கள் கவனம் பெற்றனர். ஆனால், அது தவறான தகவல் என்பது எங்களுக்குத் தெரியும்” என்று குறிப்பிட்டார். எனினும், தனது கூற்று குறித்து அவர் எந்தச் சான்றையும், விளக்கத்தையும் அளிக்கவில்லை.
தன்னைப் பற்றிய விவரங்களை வெளிப்படுத்த வேண்டாம் எனும் நிபந்தனையுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உக்ரைன் எல்லையில் மேலும் 7,000 வீரர்களை ரஷ்யா குவித்திருப்பதாக அமெரிக்க அரசு உறுதிசெய்திருப்பதாகக் கூறினார். நேற்று (பிப்.16) ரஷ்யாவிலிருந்து கூடுதலாக ராணுவ வீரர்கள் உக்ரைன் எல்லைக்குச் சென்றிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
உக்ரைன் எல்லையில் க்ரைமிய தீபகற்பத்திலிருந்து தனது படைகள் திரும்பப் பெறப்படும் காட்சிகளைக் காணொலியாக ரஷ்யா நேற்று வெளியிட்டிருந்தது.
எனினும், எம்எஸ்என்பிசி செய்தி சேனலுக்குப் பேட்டியளித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், ரஷ்யப் படையின் முக்கியப் பிரிவுகள், எல்லையை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
உக்ரைன் எல்லையில், 1 லட்சம் ரஷ்ய ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுவந்த நிலையில், ரஷ்ய வீரர்களின் எண்ணிக்கை 1.50 லட்சம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிப்ரவரி 15-ல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.