உக்ரைனுக்கு கூடுதல் விமானங்கள்: மத்திய அரசு உறுதி!


உக்ரைனில் படிக்கச் சென்ற இந்திய மாணவர்கள் நாடு திரும்ப ஏதுவாக கூடுதல் ஏர் இந்தியா விமானங்களை இயக்குமாறு பெற்றோர் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு இசைந்துள்ளது.

போர் மேகம் சூழ்ந்திருக்கும் உக்ரைன் தேசத்தில் உயர் கல்வி பெறுவதற்காக இந்தியாவை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அங்கு தங்கி உள்ளன. உக்ரைன் எல்லையிலிருந்து தனது படைகளில் ஒரு பகுதியினை திரும்பப் பெறுவதாக ரஷ்யா போக்குகாட்டினாலும் அமெரிக்கா போன்ற தேசங்கள் அதனை நம்புவதாக இல்லை.

’உக்ரைன் எல்லையில் நாங்கள் முற்றுகையிடவில்லை. வழக்கமான போர் பயிற்சியை மேற்கு நாடுகள் வேறாக திரித்து வருகின்றன’ என்ற ரஷ்யாவின் கூற்றையும் உலக நாடுகள் ஏற்பதாக இல்லை. ரஷ்யாவுக்கு அழுத்தம் தந்து வரும் ஐரோப்பிய நாடுகளின் முயற்சிகள் பிசகும்போது, எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா பாயலாம் என்ற நிலையே தொடர்கிறது. இதனையடுத்து உக்ரைனில் வாழும் வெளிநாட்டவர் வேகமாக வெளியேறி வருகின்றனர்.

உக்ரைனில் பயிலும் மருத்துவ மாணவர்கள்

நேற்று முன்தினம்(பிப்.15) இந்திய அரசு சார்பிலும் உக்ரைனில் தங்கியுள்ள இந்தியர்களுக்கு ஓர் அறிவிப்பு விடுக்கப்பட்டது. அதன்படி இந்தியர்கள் விரும்பினால் நாடு திரும்பலாம் என்று அறிவித்திருந்தது. இந்தியாவிலிருந்து உக்ரைன் சென்றவர்களில் பெரும்பாலானோர் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி பயில சென்றவர்கள். இந்தியாவைவிட அங்கே உயர்கல்விக்கான செலவு குறைவு என்பதாலும், உக்ரைன் வழங்கும் மருத்துவப் பட்டம் ஒருசில நிபந்தனைகளுடன் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்படுவதாலும், அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் அங்கே படிக்க செல்கின்றனர்.

நீடிக்கும் போர் பதட்டம் மற்றும் இந்திய அரசின் அறிவுறுத்தலை அடுத்து, பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் நாடு திரும்புமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் பயணப்படுவதற்கான விமானப் போக்குவரத்து வசதிகள் இரு நாடுகள் இடையே இல்லை. இரு தேசங்கள் இடையே நிர்ணயிக்கப்பட்ட வழக்கமான பயணிகள் விமானப் போக்குவரத்து அந்தளவிலேயே உள்ளது. இதற்கிடையே ஏர் இந்தியாவை கையப்படுத்தி இருக்கும் டாடா குழுமம், விமானக் கட்டணங்களை வெகுவாக உயர்த்தி இருப்பதாக, நாடு திரும்பவிருக்கும் மாணவர்கள் மத்தியிலான குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

பெற்றோர் மற்றும் மாணவர்களின் கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, விரைவில் உக்ரைனுக்கான ஏர் இந்தியா விமானங்களை அதிகரிக்க உள்ளதாக உறுதியளித்துள்ளது. ஆனால், விமானக் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

x