முகாமுக்கு திரும்பும் ரஷ்ய படைகள்!- உக்ரைன் எல்லையில் தணியும் போர் பதற்றம்


உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய படைகள்

போர் பதற்றம் நிலவி வந்த நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய படைகள் முகாமிற்கு திருப்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தப்போவதாக வந்த தகவலையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீண்ட காலமாகவே உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. தற்போது இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை குவித்துள்ளதால் போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுப்பதற்காகவே ரஷ்யா படைகளை குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அதனை மறுத்து வருகிறது. அதே நேரத்தில், ரஷ்யா எந்த நேரத்திலும் வான்வழி குண்டுவீச்சுடன் படையெடுப்பை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

3000 அமெரிக்க ராணுவத்தினர் உக்ரைன் எல்லையில் இருந்து 100 கிமீ தொலைவில் போலாந்து எல்லையில் குவிக்கப்பட்டுள்ளனர். போர் தொடுக்கும் பட்சத்தில், ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா, நேட்டோ படைகளும் தயாராக உள்ளன. இந்நிலையில் ரஷ்யா நாளை உக்ரைன் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. இதனிடையே, உக்ரைன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், உக்ரைனில் இருக்கும் தங்கள் நாட்டு மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இந்தியா உள்பட 12-க்கும் அதிகமான நாடுகள் கேட்டுக்கொண்டுள்ளன. உக்ரைன் மீது எந்நேரமும் ரஷ்யா போர் தொடுக்கலாம் என்கிற ரீதியில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உக்ரைன் எல்லையில் நிறுத்தப்பட்டு இருந்த படை வீரர்கள் சிலர் முகாமிற்கு திரும்பியதாக ரஷ்யா இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

x