தடுப்பூசி எதிர்ப்பாளர்களின் தாண்டவம்!


அமைதிக்கும் முற்போக்குச் சிந்தனைக்கும் மனிதநேயத்துக்கும் முன்மாதிரியாக அறியப்படும் கனடா, அறிவியலுக்கு எதிரான சிந்தனை கொண்டவர்களின் அடாவடியால் அதிர்ந்துபோய்க் கிடக்கிறது. தடுப்பூசி கட்டாயம் எனும் கனடா பிரதமரின் அறிவிப்புக்கு எதிராக அந்நாட்டின் தலைநகர் ஒட்டாவாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவரும் லாரி ஒட்டுநர்களின் போராட்டம் எல்லை கடந்திருக்கிறது. அந்த நகரின் மேயர் நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தப்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது. கனடா நாட்டின் போர் நினைவுச் சின்னங்கள் இழிவுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இடைவிடாமல் அலறும் ஏர் ஹார்ன் சத்தம், நகர மக்களின் நிம்மதியைச் சீர்குலைத்துவருகிறது. அனைத்து தெருக்களும் லாரிகளால் அடைக்கப்பட்டிருப்பதால், உள்ளூர் மக்களால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. முற்றாய் முடங்கிப்போன அந்நகர மக்களின் அன்றாட வாழ்க்கை நரகமாகிக் கிடக்கிறது. ஏன் இந்த ஆர்ப்பாட்டம்?

கட்டுப்பாடுகளுக்கு எதிரான ஆவேசம்

அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, தன் நாட்டு மக்களைத் தொற்று பாதிப்பிலிருந்து காக்கும் நோக்கில், கனடா அரசு கரோனா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவதற்கும், பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதற்கும் கரோனா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டது. முக்கியமாக, கனடா எல்லையைத் தாண்டி வரும் / செல்லும் லாரி ஓட்டுநர்களுக்குத் தடுப்பூசி கட்டாயம் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அரசு உத்தரவிட்டது.

இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கொந்தளித்த லாரி ஓட்டுநர்கள், தலைநகர் ஒட்டாவா நகருக்குள் லாரிகளுடன் நுழைந்து ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்கிற பெயரில், அந்த நகரிலிருக்கும் போர் நினைவிடங்களை ஆக்கிரமித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டம், தொடக்கத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசாங்கத்தால் விதிக்கப்பட்ட கட்டாயத் தடுப்பூசி ஆணைகளை மட்டுமே எதிர்ப்பு மையமாகக் கொண்டிருந்தது. தற்போது அது பொதுமுடக்கம், முகக்கவசம் அணிதல் போன்ற பொதுவான தொற்றுநோய் தடுப்பு விதிகளை உள்ளடக்கியதாக வளர்ந்திருக்கிறது.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

உண்மைக்கு ஓர் அவமானம்

ஜனவரி 22 முதல் நடந்துவரும் இந்தப் போராட்டத்துக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக மாற்றப்பட்டது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் பாதுகாப்பான ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டார். அங்கிருந்துகொண்டே தனது பணிகளை மேற்கொள்ளும் ஜஸ்டின் ட்ரூடோ, இந்தப் போராட்டம் ‘உண்மைக்கு ஓர் அவமானம்’ எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஒருகட்டத்தில் டொரான்டோ, கியூபெக் ஆகிய நகரங்களிலும் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். ஆல்பர்ட்டா, சஸ்காட்சுவான், மனிடோபா, பிரிட்டிஷ் கொலம்பியா ஆகிய மாகாணங்களின் சட்டப்பேரவைகளுக்கு அருகில் டிரக்குகள் பேரணிகளாகக் குவிந்தன.

தடுப்பூசி முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒட்டாவா நகரத்தை முற்றுகையிட்டனர். பெருந்திரளானோர் ஒன்று கூடியதால், ஒட்டாவா நகரம் நிலைகுலைந்தது. லாரி ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களைப் பரபரப்பான சாலைகளில் நிறுத்தியதால், நாடாளுமன்றம் அமைந்திருக்கும் டவுன்டவுன் பகுதி முற்றிலுமாக முடங்கியது.

நெருக்கடிநிலை பிரகடனம்

அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க முன்னெச்சரிக்கையாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்படுவதாக ஒட்டாவா நகர மேயர் ஜிம் வாட்சன் அறிவித்தார். அப்போது, “ஒட்டாவா நகரவாசிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இவர்களில் சிலரின் பொறுப்பற்ற நடத்தை காரணமாக யாராவது கொல்லப்படுவார்கள் அல்லது கடுமையாகக் காயமடையப் போகிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

ஒட்டாவா நகரம் முற்றிலும் முற்றுகையிடப்பட்டு இருப்பதாக, அந்நகரின் காவல் துறைத் தலைவர் ஸ்லோலி கவலையுடன் தெரிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இன்னும் 1,800 காவல் துறை அதிகாரிகள் தேவை என்கிறார். ஆனால், ஒட்டாவா நகர காவல் துறையினரின் மொத்த எண்ணிக்கை 1,200 மட்டுமே. அவர் கேட்கும் கூடுதல் எண்ணிக்கையிலான காவல் துறையினர் எங்கிருந்து வருவார்கள் என்று தெரியவில்லை.

மத்திய அரசின் உதவி

மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்கோ மென்டிசினோ, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகப் போராடும் அறிவியல் எதிர்ப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைத் திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார். “மக்களின் நலனைப் பாதுகாக்கும் பொதுக் கொள்கையில் பொறுப்பற்ற மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம்” என்றும் அவர் உறுதியுடன் தெரிவித்திருக்கிறார்.

போராட்டத்தை அடக்குவதற்குத் தேவையான கூடுதல் உதவிகளை வழங்குவதற்கும் மத்திய அரசு உறுதியளித்திருக்கிறது.

வலதுசாரிகளின் ஆதரவு

இந்தப் போராட்டத்துக்கு உலகம் முழுதும் உள்ள தீவிர வலதுசாரி ஆர்வலர்கள் ஆதரவளித்து வருகின்றனர். அவர்களில் சிலர் தங்கள் நாடுகளிலும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். சுமார் இரண்டு வாரங்களுக்கு முன்பு, இந்தப் போராட்டத்தின் புகைப்படங்கள் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருக்கும் தடுப்பூசி எதிர்ப்புக் குழுக்களில் தோன்றின. ஓட்டுநர்களால் பயன்படுத்தப்படும் #FreedomConvoy எனும் ஹேஷ்டேக், ஃபேஸ்புக், ட்விட்டர், டெலிகிராம் போன்றவற்றில் வேகமாகப் பரவியது.

இந்தப் போராட்டத்தை ஆதரித்தவர்களில் முதன்மையானவர்களாகக் கருதப்படும் அமெரிக்கத் தடுப்பூசி எதிர்ப்புக் குழுக்கள், கனடாவில் பயன்படுத்தப்படும் போராட்ட உத்தியை அமெரிக்காவிலும் பின்பற்றுமாறு அமெரிக்காவின் டிரக்கர்களை வலியுறுத்தியுள்ளன.

டான் போங்கினோ, பென் ஷாபிரோ உள்ளிட்ட பல தீவிர வலதுசாரி பிரமுகர்கள் ஒட்டாவா நகரை முற்றுகையிட்டிருக்கும் போராட்டக்காரர்களைத் தொடர்ந்து ஊக்குவித்துவருகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக நிதி திரட்டும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஒரு பிராந்தியக் குழுவின் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பாட் கிங், இணையவழி போராட்ட முன்னெடுப்புகளில் முக்கியமானவர். குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடும் மருத்துவர்களுக்கு மரணதண்டனை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தவர். கோவிட் என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட உயிர் ஆயுதம் என்கிற கருத்தியலை இணையத்தில் பரப்பியவர். இந்தப் போராட்டக்காரர்களின் கைகளில் இருக்கும் கொடிகளில் ட்ரம்ப், ரோமானா டிடுலோ போன்றவர்களின் படங்கள் தென்படுகின்றன.

போராட்டத்துக்கு எதிர்ப்பு

மறுபுறம், ஒட்டாவா நகரவாசிகள் மட்டுமல்லாது அறிவியலிலும், ஜனநாயகத்திலும் நம்பிக்கை வைத்திருக்கும் கனடா மக்களில் பெரும்பாலானோர் போராட்டக்காரர்களின் மீது மிகுந்த கோபமடைந்துள்ளனர். அதனாலேயே அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் இருப்பது போன்று வலதுசாரி இயக்கங்களால் கனடாவின் பிரதான நீரோட்டத்தில் அத்தனை எளிதாக ஊடுருவ முடியவில்லை. அவர்களின் எண்ணிக்கை குறைவு என்பதும் கவனிக்கத்தக்க இன்னொரு அம்சம். இயல்பாகவே கரோனா தடுப்பு நடவடிக்கைகளையும் கட்டுப்பாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவர மக்களில் பலர் விரும்பும் நிலையில், வலதுசாரிகள் இந்தப் போராட்டத்தைத் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் ஒரு வாய்ப்பாகக் கருதி, வன்மத்தையும் வெறுப்பையும் வேகமாகப் பரப்பிவருகின்றனர்.

கனடா இந்த நரகச் சூழலிலிருந்து எப்போது வெளிவரும் என்பதுதான் கரோனா பெருந்தொற்றின் உக்கிரத்தை உணர்ந்தவர்களின் கவலை!

கனடாவின் தீவிர வலதுசாரி மக்கள் கட்சியின் உறுப்பினர்களும் ஒட்டாவா நகரில் எதிர்ப்பாளர்களிடையே நன்கு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். அதன் தலைவரான மாக்சிம் பெர்னியர், கட்டாயத் தடுப்பூசி தொடர்பான உத்தரவுகளுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னர் குடியேற்றம், பன்முகக் கலாச்சாரம் ஆகியவற்றுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர் அவர்.

உயிருடன் விளையாடுவது சரியா?

அறிவியலின் பலனை அனுபவித்துக்கொண்டே அறிவியலை மறுப்பது வலதுசாரி சித்தாந்தத்தின் அடிப்படை இயல்பு. அறிவியல் குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைய முயல்வது அவர்களின் அரசியல் வழிமுறை. அந்த வழிமுறை ஏற்படுத்தும் அச்சமும் குழப்பமும் வன்மம் மிக்க வன்முறையை உலகின் பல நாடுகளில் ஏற்படுத்தி இருக்கின்றன. கனடா இந்த நரகச் சூழலிலிருந்து எப்போது வெளிவரும் என்பதுதான் கரோனா பெருந்தொற்றின் உக்கிரத்தை உணர்ந்தவர்களின் கவலை!

x