உச்சகட்டத்தை நெருங்கிய உக்ரைன் விவகாரம்


உக்ரைன் மீது எந்த நேரத்திலும் ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் எனக் கடந்த சில வாரங்களாகவே சொல்லப்பட்டுவந்தது. மறுபக்கம், முந்தைய நிகழ்வுகளை வைத்துப் பார்க்கும்போது, அத்தனை எளிதில் ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவிவிடாது என்றும் ஒரு நம்பிக்கையும் நிலவியது. ஆனால், இன்றைய தேதிக்கு அந்த நம்பிக்கையும் பொய்த்துவிடும் என்றே தெரிகிறது. அமெரிக்க உளவுத் துறையினரும் இதுகுறித்து வெள்ளை மாளிகைக்கும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். ரஷ்யப் படைகளுடன், உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ஆதிக்கம் செலுத்தும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத அமைப்புகளும் உக்ரைன் மீதான தாக்குதலில் ஈடுபடவிருக்கிறார்கள். அதற்கான போர்ப்பயிற்சிகளிலும் அப்படைகள் ஈடுபட்டிருக்கின்றன.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்துவரும், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிப்ரவரி 20-ல் நிறைவடைகின்றன. அதற்கு முன்னதாக ஊடுருவல் நிகழலாம் என ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடந்த செய்தியாளர் சந்திப்பில். அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் கூறியிருக்கிறார். உக்ரைன் தலைநகர் கீயெவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திலிருந்து அனைவரும் வெளியேறுமாறு அமெரிக்கா அறிவுறுத்தியிருப்பது, அதை மேலும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இவ்விவகாரம் எந்த திசையில் செல்லும்? ரஷ்யாவைத் தடுக்க உலக நாடுகளின் கைவசம் இருக்கும் உபாயம் என்ன? பார்க்கலாம்!

2014 பிப்ரவரியில் உக்ரைனுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவிய நிகழ்வு, ஐரோப்பிய நாடுகளைப் பதற்றத்தில் ஆழ்த்தியது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க மறுத்து ரஷ்யாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக, உக்ரைனின் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராகப் போராட்டங்கள் எழுந்தன. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி உக்ரைன் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டம் நடத்தியவர்களில் 100-க்கும் மேற்பட்டோரை அரசுப் படைகள் சுட்டுக்கொன்றன. இதையடுத்து, மக்களின் கோபாவேசம் அதிகரித்தது. ஆயுதப் போராட்டங்களும் நடந்தன. இதனால், பதவியை ராஜினாமா செய்த விக்டர் யானுகோவிச், ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றார்.

இதற்கிடையே ரஷ்யப் படைகள் உக்ரைனில் உள்ள க்ரைமியாவுக்குள் நுழைந்து, அதை ரஷ்யாவுடன் இணைத்தன. ஒரு நாடு இன்னொரு நாட்டுக்குச் சொந்தமான ஒரு நிலப் பகுதியின் மீது தனது அரசியல் ரீதியான, சட்ட ரீதியான, ராணுவ ரீதியான இறையாண்மையை ஒருதலைபட்சமாக அறிவிப்பது அல்லது மாற்றம் செய்வது இணைப்பு (Annexation) என்று அழைக்கப்படுகிறது. ஐநாவைப் பொறுத்தவரை இத்தகைய இணைப்பு சட்டவிரோதம் ஆகும். ரஷ்யா அதைத்தான் செய்தது. அதேவேளையில், ரஷ்யா க்ரைமியாவை சுலபமாக ஆக்கிரமித்துக்கொண்டதற்கு, அந்தப் பிராந்திய மக்கள் இயல்பாகவே ரஷ்யக் கலாச்சார, பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டவர்கள் என்பது முக்கியக் காரணம்.

இப்போதும், உக்ரைனைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே ரஷ்யா விரும்புகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான உக்ரைனின் உறவை விரும்பாத ரஷ்யா, நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்துவிடக் கூடாது என்பதிலும் கண்டிப்பு காட்டுகிறது. உக்ரைனுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தப்போவதாக ரஷ்யா மிரட்டிவருவதன் பிரதானப் பின்னணி இதுதான்.

க்ரைமியா இணைப்பு நிகழ்வின் மூலம், ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவில் முரண்கள் முளைத்தன. எனினும், முழு முற்றாக ரஷ்யாவின் உறவைத் துண்டித்துக்கொள்ள மேற்கத்திய நாடுகளால் இன்றுவரை இயலவில்லை. அதற்குக் காரணம், ரஷ்யா ஒரு அணுசக்தி தேசம். எரிசக்தித் தேவைக்கு அந்நாட்டை ஐரோப்பிய நாடுகள் பெருமளவில் சார்ந்திருக்கின்றன.

ஆனால், ரஷ்யாவை ராணுவ ரீதியாக எதிர்கொள்வதில் அமெரிக்காவோ மேற்கத்திய நாடுகளோ பெரிய அளவில் காய்நகர்த்த முடியவில்லை. உக்ரைனின் டோன்பாஸ் பிராந்தியத்தில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதக் குழுக்கள், நடத்திவந்த ரத்தக்களரியையும் தடுக்க முடியவில்லை. அந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான், இராக், சிரியா எனப் பல்வேறு நாடுகளில் பிரச்சினைகள் உச்சத்தில் இருந்த நிலையில், அமெரிக்காவால் க்ரைமியா விவகாரத்தில் அதிக கவனம் செலுத்த முடியவில்லை. அதற்கு வேறு உபாயம்தான் கைகொடுத்தது!

ஒருபுறம் உக்ரைனுக்கு ராணுவ ரீதியிலான உதவிகளை அளித்த அமெரிக்கா, மறுபுறம் சர்வதேச நாடுகளை அணிதிரட்டி ரஷ்யாவுக்கு எதிராக நிற்கவைத்தது. ராணுவ ரீதியாக அல்ல, பொருளாதார ரீதியாகத் தரப்பட்ட அழுத்தத்துக்குதான் ரஷ்யா அப்போது பணிந்தது. அந்நாட்டின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. க்ரைமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்டது சட்டவிரோதம் என ஐநா அறிவித்தது.

அதற்கு முன்பு, 2008-ல் ஜார்ஜியாவுக்குள் ரஷ்யப் படைகள் ஊடுருவி அந்நாட்டின் பிரிவினைவாதக் குழுக்களின் கரத்தை ஓங்கச் செய்தபோதும், பொருளாதாரத் தடை எனும் அஸ்திரம்தான் ரஷ்யாவைப் பின்வாங்க வைத்தது.

தற்போது சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்துவரும் நிலையில், எந்த நகர்வும் கூடாது என்பதில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெளிவாக இருக்கிறாராம். பெரும் பொருட்செலவில் தனது நண்பர் ஜி ஜின்பிங் நடத்திவரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு, தனது செயலால் இடைஞ்சல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என அவர் கருதுகிறார். அதனால்தான், ஒலிம்பிக் முடியும் தருவாயில் ஊடுருவலுக்கு அவர் திட்டமிடுகிறார்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும்

ஐரோப்பிய நாடுகளுடனான வலுவான பிணைப்பைத் தனக்கு சாதகமாகவே ரஷ்யா பயன்படுத்துகிறது. எனவே, சர்வதேச அளவில் பொருளாதார ரீதியாக ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவது அத்தனை எளிதல்ல. பைடன் அரசும் இவ்விஷயத்தை இதுவரை ரொம்பவே ஜாக்கிரதையுடன்தான் அணுகிவருகிறது. ரஷ்யாவை எதிர்த்துப் போரிட படைகளை அனுப்பப்போவதில்லை என்று பகிரங்கமாகச் சொன்ன அமெரிக்கா, மறுபுறம் நேட்டோ நாடுகளைப் பாதுகாப்பதற்காக மட்டுமே படைகளை அனுப்ப முன்வந்திருக்கிறது. உக்ரைன் ராணுவத்துக்குப் பயிற்சியளிக்க அங்கு தங்கியிருக்கும் அமெரிக்க ராணுவத்தினரின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டாது. எனவே, இன்றைய நிலையில் ராணுவ ரீதியாக உக்ரைனைக் காபந்து செய்ய அமெரிக்காவால் நேரடியாகச் சாத்தியம் குறைவு.

எனினும், மாற்று உபாயங்களை முன்வைத்தால் அமெரிக்காவால் ரஷ்யாவை வழிக்குக் கொண்டுவர முடியும் என சர்வதேசப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ரஷ்ய வங்கிகள் மீது பொருளாதாரத் தடை விதிக்க ஐரோப்பிய நாடுகளின் ஒப்புதலைப் பெற அமெரிக்கா முயலலாம். அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து, திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகத்தை அதிகரிக்கலாம். அதன் மூலம் எரிபொருளுக்காக ரஷ்யாவைச் சார்ந்திருக்கும் நிலையிலிருந்து ஐரோப்பிய நாடுகளை விடுவிக்கலாம்.

ஈரானிடமிருந்து பெரும் அளவில் பெட்ரோல் இறக்குமதி செய்துவந்த நாடுகள் மூலம் அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுத்து, அணு ஒப்பந்தத்துக்குள் மீண்டும் அந்நாட்டை வரவழைக்கலாம். ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் அமெரிக்க அரசு அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது. இதனால், அதிருப்தியடைந்த நிலையில் இருக்கும் ஈரானை மீண்டும் சமாதானப்படுத்துவதன் மூலம் ரஷ்யாவுக்குச் செக் வைக்கலாம்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

அதிகாரக் குவிப்பை விரும்பும் ஆட்சியாளர்கள் பலரும் தாங்கள் உலக அரங்கில் மதிப்புடன் நடத்தப்பட வேண்டும் என்றும் விரும்புவார்கள். புதினும் அப்படிப்பட்டவர்தான். எனவே, உக்ரைன் விஷயத்தில் திரிக்கப்பட்ட தகவல்களை வழங்கிவரும் ரஷ்யாவைப் பொதுவெளியில் அம்பலப்படுத்துவதன் மூலம், அவருக்கு நெருடலை உருவாக்கலாம். அத்துடன், கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா எனப் பல்வேறு பகுதிகளில் சர்வாதிகார அரசுகளுக்கு ரஷ்யா அளித்துவரும் ஆதரவைப் பற்றி பகிரங்கமாகப் பேசுவதன் மூலம் அந்நாட்டுக்குத் தார்மிக ரீதியில் அழுத்தம் கொடுக்கலாம்.

2014-ல் உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவிய நிகழ்வின்போது நடந்த மோதல்களில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். உக்ரைனுடன் ரஷ்யா போரில் இறங்கினால் ஏராளமான உயிர்ச் சேதம் நடக்கும். எண்ணற்றோர் அகதிகளாகப் புகலிடம் தேடி பிற நாடுகளில் தஞ்சமடைவார்கள். ஒரு சங்கிலித் தொடர் போல அண்டை நாடுகளுக்கும், உலக சமுதாயத்துக்கும் கூடுதலாக அழுத்தம் ஏற்படும். எனவே, ரத்தக்களரியைத் தடுக்க, ஆயுதமற்ற ராஜதந்திர நடவடிக்கைகளே வழிவகுக்கும் எனப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். பார்க்கலாம்!

x