‘எய்ட்ஸ்’ வைரஸ் கண்டுபிடிப்பு, கரோனா வைரஸ் சர்ச்சை: நோபெல் விஞ்ஞானி லூக் மான்டாக்னியர் மறைந்தார்!


லூக் மான்டாக்னியர்

உலகை இன்னமும் அச்சுறுத்தி வரும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான ஹெச்ஐவி வைரஸை இணைந்து கண்டறிந்ததற்காக நோபெல் பரிசு வென்றவரும், கோவிட் வைரஸ் தொடர்பான இந்திய சர்ச்சைகளுக்கு காரணமானவருமான, பிரெஞ்சு விஞ்ஞானி லூக் மான்டாக்னியர் மூப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார்.

எண்பதுகளில் உலகை அச்சுறுத்தி வந்த மர்ம நோய் ஒன்றின் பின்னணியை ஆராயத் தொடங்கிய லூக் மான்டாக்னியர், தனது சகாவான பிரான்கோயிஸ் பேரி என்பவருடன் இணைந்து 1983இல் ’ஹெச்ஐவி’யை கண்டுபிடித்தார். இந்த வைரஸ்தான் எய்ட்ஸ் நோயை விளைவிக்கிறது என்று இவர்கள் கண்டறிந்து சொன்ன பிறகே, உலகில் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு பரவியது. எய்ட்ஸ் குணப்படுத்தலுக்கான மருந்துகள் மற்றும் தடுப்பதற்கான தடுப்பூசிகள் இன்னமும் திட்டவட்டமாக கண்டறியப்படவில்லை என்றபோதும், தொடர் ஆராய்ச்சிகளுக்கு இந்த கண்டுபிடிப்பு பேருதவியானது.

ஹெச்ஐவி கண்டுபிடிப்புக்காக 2008ல் மருத்துவத்துக்கான நோபெல் பரிசினை தனது சகாவுடன் சேர்ந்து லூக் மான்டாக்னியர் பெற்றார். இந்த நோபெல் பரிசின் இன்னொரு பாதி கேன்சர் ஆராய்ச்சியில் சாதனை படைத்த இன்னொரு பிரெஞ்சு விஞ்ஞானி ஹரால்ட் ஹௌசன் என்பவர் பகிர்ந்து கொண்டார்.

உலகின் தலைசிறந்த வைராலஜிஸ்டான லூக் மான்டாக்னியர், தான் வாழ்நாள் முழுக்க வைரஸ் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டார். பாரிஸில் அமைந்திருக்கும் எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் தடுப்புக்கான சர்வதேச அமைப்பின் இயக்குநராகவும் சேவை புரிந்திருக்கிறார்.

இவரது வைரஸ் தொடர்பான கருத்துக்கள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டதால் சர்ச்சைகளும் எழுந்திருக்கின்றன. 2020ல் கரோனா வைரஸிடம் உலகம் சிக்கித் தவித்தபோது அவர் தெரிவித்த கருத்துகள் விவாதங்களுக்கு ஆளாயின. ‘சீனாவின் வூஹானில் எய்ட்ஸ்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் மருத்து ஆராய்ச்சியில் வெளிப்பட்டதே கரோனா வைரஸ்’ என்றார். சீன மருத்துவ ஆய்வகத்தில் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது கரோனா வைரஸ் என்ற இவரது கருத்து, மேற்கு நாடுகள் மத்தியில் சீனாவுக்கு எதிரான கொதிப்பை அதிகரித்தது.

’தடுப்பூசிகளால் கரோனா திரிபுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’ என்ற லூக் மான்டாக்னியரின் கருத்து விவாதங்களை கிளப்பியது. ’கரோனா தடுப்பூசி போட்டவர்கள் 2 வருடங்களில் இறந்துவிடுவார்கள்’ என இவர் சொன்னதாக, இந்தியாவில் பரவிய வதந்திக்கு மத்திய அரசு விளக்கம் தர வேண்டியதாயிற்று.

பாரிஸில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் பிப்.8 அன்று லூக் மான்டாக்னியர் இறந்ததாக, இன்று(பிப்.11) தகவல் வெளியாகி உள்ளது.

x