சீனாவில் 996 பணி கலாச்சாரம் மீண்டும் தலையெடுத்ததில், அண்மையில் பணியிடத்திலேயே இளம் ஊழியர் ஒருவர் பரிதாபமாக இறந்துபோனார். இதனால் 996 கலாச்சாரத்துக்கு எதிராக அங்கு மீண்டும் ஆட்சேபங்கள் எழுந்துள்ளன.
கரோனா தாக்கத்திலிருந்து மீண்டுள்ள உலகம், முந்தைய இயல்பு ஓட்டத்துக்கு திரும்புவதற்காக சற்று வேகம் கூட்டியிருக்கிறது. இதனால் தங்களது பணியாளர்களை கூடுதலாக நேரம் மற்றும் திறனுடன் வேலை செய்யப் பணித்து வருகிறது. பெருந்தொற்று பரவல் பாதிப்புகளில் ஒன்றாக ஏராளமானோர் வீட்டுக்கு அனுபப்பட்டிருந்ததால், எஞ்சிய சொற்பப் பணியாளர்களுக்கு கூடுதல் பணிச் சுமை சூழ்ந்தது. இதனால் உடல் மற்றும் மன அழுத்தங்களால் அவர்கள் பாதிக்கப்பட, சில உயிரிழப்புகளும் நேர்ந்திருக்கின்றன.
அண்மையில் சீனாவை சேர்ந்த குறுவீடியோ சமூக தளமான பிலிபிலி நிறுவனத்தில், விடுமுறை வாய்க்காததில் ஓயாது உழைத்த 25 வயது பணியாளர், வேலையிடத்திலேயே மயக்கமுற்று உயிரிழந்தார். சடலத்தைப் பரிசோதித்த மருத்துவர்கள், கூடுதல் பணிச்சுமை காரணமாக அவரது மூளைக்குள் இரத்தக்கசிவு ஏற்பட்டதில் உயிரிழப்பு நேர்ந்ததாக கூறி இருக்கிறார்கள். இந்த உயிரிழப்பு, சீனாவின் ட்விட்டரான வெய்போவில் பெரும் விவாதப் பொருளானது. சீனாவில் குறைந்திருப்பதாகக் கருதப்பட்ட 996 பணி கலாச்சாரம் மீண்டும் எழுந்திருப்பதும், அது பணியாளர்களின் உயிரைக் குடிக்க தொடங்கியிருப்பதையும் வலையுலகவாசிகள் வருத்தத்துடன் பகிரிந்துகொண்டனர்.
அதிகம் உழைப்பவர்களுக்கு கூடுதல் ஊதியம் தரும் வழக்கம் சீனாவில் உண்டு. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதிகம் செலவழிப்பதைவிட, ஊழியர்களை மேலும் சுரண்டும் தொழில்நிறுவனங்களின் சூழ்ச்சியே, சொற்பச் சலுகைகளை அறிவித்திருக்கும் இந்தக் கரிசனத்தின் பின்னிருக்கும். காலை 9 முதல் இரவு 9 மணிவரை என வாரத்தில் 6 நாட்களும் வேலை பார்ப்பதே ’996 பணி கலாச்சாரம்’ எனப்படுகிறது.
கூடுதல் சலுகைகள் மற்றும் வாழ்க்கை வதிகளுக்கான தூண்டிலில் ஊழியர்களும் இரையாகி வருகின்றனர். இந்த கூடுதல் பணி நேரத்தால், பணியிடங்களிலே மயங்கி விழுந்து இறப்பைத் தழுவும் பணியாளர்கள் அங்கே அதிகம். அலிபாபா நிறுவனரான ஜாக் மா போன்றவர்களால், கவர்ச்சிகரமாக கொண்டு செல்லப்பட்ட 996 பணி கலாச்சாரத்துக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்புகள், அரசு உத்தரவுகள் நடைமுறையில் இருந்தபோதும் அவற்றை முறையாக பின்பற்றுவோர் இல்லை.
அப்படித்தான், தினத்துக்கு 12 மணி நேரம் உழைத்துவந்த பிலிபிலி நிறுவன ஊழியர் பணியிடத்திலேயே உயிரிழந்திருக்கிறார். இதையடுத்து பிப்.8 அன்று பிலிபிலி நிறுவனம் சார்பிலான பொதுமக்களுக்கான அறிக்கையில், ’தங்கள் ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், ஊழியர்களின் பணிச் சுமையை குறைக்க கூடுதலாக 1000 பேரை விரைவில் பணியில் அமர்த்த இருப்பதாகவும்’ விளக்கம் தந்துள்ளது.
996 பணி கலாச்சாரத்தில் ஒவ்வொரு உயிரை பறிகொடுக்கும்போதும், இவ்வாறு நிறுவனங்களின் பசப்பு உத்திரவாதங்கள் அதிகரிக்கும். ஆனால், வழக்கம்போல தங்கள் சுயலாபத்துக்காக பணியாளர்களை நிறுவனங்கள் சுரண்டுவது சத்தமின்றி ஆரம்பித்துவிடும். சீனாவில் மட்டுமல்ல, கரோனாவிலிருந்து மீண்ட உலக அளவிலான பல்வேறு தொழில் நிறுவனங்களும் விட்டதைப் பிடிக்கும் நோக்கத்தில் தங்கள் பணியாளர்களை விரட்டி வருகின்றன. பெருந்தொற்று பாதித்து நேரடியாக இறப்போருக்கு இணையாக, பெருந்தொற்று காரணமாக எழுந்த பணியிழப்பு மற்றும் பணி அழுத்தம் காரணமாக இறப்போரின் எண்ணிக்கையும் உயர்ந்துவருவது கவலைக்குரியது.