உக்ரைனுக்குள் ரஷ்யா ஊடுருவுமா, பின்வாங்குமா?


உக்ரைன் எல்லையில் ரஷ்யப் படைகள் 2021 செப்டம்பர் மாதம் முதல் முகாமிட்டிருக்கின்றன. உக்ரைனுக்குள் அப்படைகள் எப்போது வேண்டுமானாலும் ஊடுருவலாம் எனும் அச்சம் நிலவுவதால், ரஷ்யாவை அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்துவருகின்றன.

படைகளை இதுவரை திரும்பப் பெறவில்லை என்றாலும், உக்ரைனுக்குள் ஊடுருவப்போவதாக வெளியாகும் தகவல்களை ரஷ்யா மறுத்துவருகிறது. ஆனால், ரஷ்யாவின் வார்த்தைகளில் நம்பகத்தன்மை இல்லை என்றே, சர்வதேசப் பார்வையாளர்களில் சிலர் சந்தேகிக்கின்றனர்.

அதேவேளையில், கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யாவின் புவி அரசியலை உன்னிப்பாகக் கவனித்துவருபவர்கள், சர்வதேச சமூகத்தை ஏமாற்ற ரஷ்யா முனையாது என்றே கருதுகிறார்கள். ரஷ்யாவின் புவி அரசியல் விளையாட்டில் தனது வலிமையைப் பயன்படுத்தி காய்நகர்த்திவரும் ரஷ்யா, உக்ரைன் மீது முழுவீச்சில் போர் தொடுத்துவிடாது என்பது அவர்களின் கருத்து. அதற்கு ஜார்ஜியா, சிரியா, லிபியா போன்ற நாடுகளுடனான ரஷ்யாவின் நிலைப்பாட்டை உதாரணமாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுகுறித்து அல் ஜஸீரா இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் சர்வதேச அரசியல் பார்வையாளர் ஹாரூன் இல்மாஸ் பல முக்கிய வாதங்களை முன்வைக்கிறார். உக்ரைன், காகசஸ், மத்திய ஆசியா தொடர்பாக ஆய்வு நடத்திவருபவர் அவர்.

இந்த விவகாரங்களைப் பொறுத்தவரை, கள நிலவரத்தை நன்கு உணர்ந்துகொண்ட ரஷ்யா தனது பலம் மற்றும் பலவீனத்தை கவனமாக ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் தனது வலிமையை வெளிப்படுத்திவந்திருக்கிறது. நீண்ட காலம் போரில் ஈடுபடுவதன் சாதக பாதகங்களை நன்கு உணர்ந்த ஆட்சியாளர்களால் இதுகுறித்த கொள்கை உருவாக்கப்பட்டிருக்கிறது.

2008-ல் ஜியார்ஜியா நாட்டில், அரசுக்கு எதிராகப் போர் நடத்திய பிரிவினைக் குழுக்களுக்கு ஆதரவாக ரஷ்யப் படைகள் அந்நாட்டுக்குள் ஊடுருவின. தெற்கு ஒஸ்சீஷியா மற்றும் அப்காஜியா பகுதிகளில் ஊடுருவி, மிகச் சில நாட்களிலேயே அரசுப் படைகளை எளிதாகத் தோற்கடித்தன ரஷ்யப் படைகள். தெற்கு ஒஸ்சீஷியா மற்றும் அப்காஜியா பகுதிகளில் இருந்து அரசுப் படைகளை விரட்டியடித்த கையோடு, ஐரோப்பிய நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிவிட்டது ரஷ்யா. நினைத்திருந்தால் ஜார்ஜியாவை இரண்டாக உடைத்திருக்கலாம். அதன் அருகில் உள்ள அஸர்பாய்ஜான் நாட்டிலிருந்து துருக்கிக்குச் செல்லும் எரிவாயுக் குழாய் சப்ளையைக் கைப்பற்றி அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் லாபம் பார்த்திருக்கலாம். பிரிவினை கோரி யுத்தம் நடத்திவந்த படைகளின் கோரிக்கையை நிறைவேற்றுமாறு ஜார்ஜிய அரசுக்கும் அழுத்தம் தந்திருக்கலாம். ஆனால், பிராந்திய ரீதியிலும் சர்வதேச ரீதியிலும் பாரதூரமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதால், ரஷ்யா அப்படி ஒரு சாமர்த்தியமான முடிவை எடுத்தது என ஹாரூன் இல்மாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

2015-ல் சிரியாவின் பஷார் அல் அசாதுக்கு ஆதரவாக, அரசு எதிர்ப்புப் படைகளை ஒடுக்க ரஷ்யா களமிறங்கியது. எனினும், அந்தத் தாக்குதலுக்குப் பெரிய அளவில் படைகளை இறக்க ரஷ்யா முன்வரவில்லை என்கிறார் ஹாரூன் இல்மாஸ். கூடவே, அமெரிக்கா, இஸ்ரேல், துருக்கி ஆகிய நாடுகளுடன் பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தது ரஷ்யா. இதன் மூலம் அரசு எதிர்ப்புப் படைகளுக்கு விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் சென்று சேராமல் பார்த்துக்கொண்டது.

இப்படிப் பல்வேறு உத்திகள் மூலம், அசாதின் அரசைப் பாதுகாத்ததுடன், அதிகம் பொருளாதாரச் செலவோ உயிரிழப்புகளோ ஏற்படாமலும் பார்த்துக்கொண்டது. கூடவே, மேற்கத்திய நாடுகளுடனுடன் ராஜதந்திர ரீதியிலான லாபத்தையும் ரஷ்யா அடைந்தது.

இப்படிப் பல்வேறு உதாரணங்களை அக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கும் ஹாரூன் இல்மாஸ் 2014-ல் உக்ரைனில் ரஷ்யப் படைகள் நுழைந்தபோது நடந்த சம்பவங்கள் குறித்தும் எழுதியிருக்கிறார். ஐரோப்பிய ஒன்றியத்துடன் உக்ரைனை இணைக்க மறுத்து ரஷ்யாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக உக்ரைனின் அதிபர் விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராகக் கிளர்ச்சிப் படையினர் யுத்தத்தைத் தொடங்கினர். ஒருகட்டத்தில் பதவியை ராஜினாமா செய்த விக்டர் யானுகோவிச், தனது அதிகாரங்களைக் குறைத்துக் கொண்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்தவும் ஒப்புக்கொண்டு நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றார்.

அப்போதும் மிகுந்த கவனத்துடன் காய்நகர்த்தி அதிகச் செலவில்லாமலும் உயிர்ச் சேதம் இல்லாமலும் ரஷ்யா மேற்கொண்ட நடவடிக்கைகளை ஹாரூன் இல்மாஸ் தனது கட்டுரையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதும் இவ்விஷயங்களில் அதிகப் பிரக்ஞையுடன் இருக்கும் ரஷ்யா, தற்போது உக்ரைன் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தலை உருவாக்க வேண்டும் என்றும், அந்நாடுகள் தன்னிடம் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிடுகிறார். எனவே, உக்ரைன் மீது மிகப் பெரிய அளவிலான தாக்குதலை ரஷ்யா நடத்த வாய்ப்பு மிகவும் அரிது என்றே சொல்லலாம்.

x