“ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதி மறுப்பது கொடுமையானது” -மலாலா வேதனை


மலாலா

ஹிஜாப் அணிந்து பெண்கள் பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது என்றும், ஆடையைக் காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க வேண்டாம் என்றும் பாகிஸ்தான் பெண் உரிமை போராளி மலாலா யூசுப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம், உடுப்பி மாவட்டத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்து கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதனிடையே, காவி சால்வை அணிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு வந்தனர். இந்தப் போராட்டம் கர்நாடகா முழுவதும் பரவியதால் பதற்றம் நிலவியது. தாவணகெரே, ஷிவமொக்கா மாவட்டங்களில் மாணவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு, தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து மாநிலத்தில் பதற்றம் நிலவி வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவித்து முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமை போராளி மலாலா யூசுப், “ஹிஜாப் அணிந்து பள்ளிக்குச் செல்ல அனுமதிக்க மறுப்பது கொடுமையானது” என கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “இஸ்லாமியப் பெண்களை புறந்தள்ளுவதை நிறுத்த வேண்டும். புறக்கணிப்பது தொடர்வது வேதனை தருகிறது. ஆடையைக் காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க வேண்டாம். பெண்களின் ஆடை குறைந்தாலோ கூடினாலோ அது பிரச்சினையாகி விடுகிறது” என்று மலாலா கூறியுள்ளார்.

x