அலைக்கழிக்கும் அதிகாரிகள்... வேதனையில் வீரர்கள்


மாதிரிப் படம்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற வெளிநாட்டு வீரர்கள், கோவிட்-19 பெருந்தொற்று பரிசோதனை என்ற பெயரில் சீன அதிகாரிகளால் துன்புறுத்தப்படுவதாக ‘டெய்லி மெயில்’ நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. தாங்கள் கட்டாயமாகத் தனிமைப்படுத்தப்படுவதாகவும், தரமற்ற உணவுகள் வழங்கப்படுவதாகவும் விளையாட்டு வீரர்கள் குமுறுவதாகவும் அதில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

கரோனா பரவலுக்கு மத்தியில் வைரஸ் பாதிப்பே இல்லாமல் போட்டியை நடத்த வேண்டும் என்று சீனா கருதுகிறது. ஆனால் அதை நிறைவேற்றும் பொறுப்பை அதிகாரிகளிடம் விட்டுவிட்டதால், தங்கள் நாட்டு மக்களிடம் எப்படி முரட்டுத்தனமாக நடப்பார்களோ அப்படி வெளிநாட்டு விளையாட்டு வீரர்களிடமும் நடக்கின்றனர். அதை ஐரோப்பிய நாட்டு வீரர்களால் தாங்கவே முடியவில்லை. பெய்ஜிங்கில் இப்போது உறைபனிப் பருவம். ஒவ்வொரு வீரருக்கும் ‘கொசு வலை கட்டிய படுக்கை’ அளவுக்கே பப்புள் என்ற பெயரில் குறைந்த பரப்பளவில் தனித்தனி இடத்தைத் தந்துவிட்டு அங்கேயே பயிற்சிகளைச் செய்துகொள்ளுமாறு கூறிவிட்டனர்.

கோவிட்-19 அறிகுறி இருப்பதாக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டவர்களைத் தனிமையான இடத்தில் அடைக்கின்றனர். அங்கே சீன பாணியில் தயாரிக்கப்பட்ட உப்பு, உறைப்பு இல்லாத சுவையற்ற உணவைத் தந்து அதைத்தான் சாப்பிட்டாக வேண்டும் என்று கண்டிப்பு காட்டுகின்றனர். முதலில் அறிகுறி இருப்பதாகக் கூறி அழைத்துச் சென்றுவிட்டு, அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் ‘உங்களுக்குத் தொற்று இல்லை’ என்று கூறி மீண்டும் சில கிலோமீட்டர் வேன்களில் ஏற்றிவந்து வீரர்கள் தங்கியிருக்கும் கிராமத்தில் விட்டுவிடுகின்றனராம். அடுத்த சில நிமிடங்களுக்கெல்லாம் – ‘எங்கோ தவறு நடந்துவிட்டது, கோவிட் அறிகுறி இல்லை என்றது நீங்கள் இல்லையாம்’ என்று கூறி மறுபடியும் கதறக் கதற இழுத்துச் சென்று பழைய தனிமை வார்டுகளிலேயே அடைத்த சம்பவங்களையும் வீரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இப்படி ஒருவருக்கல்ல பலருக்கு நடந்திருக்கிறது என்கிறார்கள்.

நோய் அறிகுறி இல்லையென்றாலும், அதிகாரிகள் தரும் மன உளைச்சல்களாலும், தரமற்ற உணவுகளாலும் உடல் அளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் விளையாட்டு வீரர்கள். பயிற்சிக்கு இடம் இல்லாததால் சர்வதேசப் போட்டியின் இறுதிக் கட்டத்தில் தங்களால் முழுதாகத் திறனைக் காட்ட முடியாமல் போய்விட்டதே என்று பலரும் வேதனைப்படுகின்றனர். மொழிபெயர்ப்புக்கு வசதி இருந்தாலும் மொழிச் சிக்கலும் கலாச்சாரச் சிக்கலும் வாட்டுகின்றன.

கோவிட் பரிசோதனை செய்துகொண்டவர்கள் இந்தப் போட்டிக்கு வந்தே இருக்க வேண்டாம் என்றே நினைக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது. விளையாட்டு வீரர்கள் மட்டுமின்றி அவர்களுடன் வந்த பயிற்சியாளர்கள், மருத்துவர்கள், ஆலோசகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர்கள் என்று அனைவருமே இப்போது கடுமையான கோவிட் பரிசோதனைக்கு ஆளாகி இவ்விதமே அலைக்கழிக்கப்படுகின்றனர்.

ரஷ்யாவைச் சேர்ந்த பையத்லான் அதலட் (உடல் சீர் போட்டி) வலேரியா வஸ்நெட்சோவா முதலில் தனி வார்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே உணவு என்ற பெயரில் மூன்று வேளையும் சுவையற்ற எதையோ தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வலுக்கட்டாயமாகச் சாப்பிட வைத்ததில் அவருக்கு மார்பிலும் இடுப்பிலும் தசைகள் கரைந்து எலும்புகள் வெளியே துருத்திக்கொண்டுவிட்டன.

ஜெர்மன் அணியின் தலைவர் டிர்க் ஷிம்மெல்பென்னிங் கோபத்தில் கொதிக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் விளையாட வரும் வீரர்களுக்கான இடமா இது என்று கோபம் கொப்பளிக்கக் கேட்கிறார். அறைகள் சிறியதாக இருப்பது மட்டுமல்ல, சுகாதாரமாகவும் இல்லையே என்கிறார். சாப்பாடு சுவையாகவும் இல்லை, சத்தாகவும் இல்லை என்று கூறும் அவர், விளையாட்டு வீரர்களுக்கு எளிதாகச் செய்யக் கூடிய பிசிஆர் சோதனைகளுக்கு இங்கே வசதியில்லை என்று சீன அதிகாரிகள் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறார்.

போலந்து நாட்டைச் சேர்ந்த ஸ்கேட்டிங் வீராங்கனை நடாலியா மிலசெவ்ஸ்காவைப் பரிசோதித்துவிட்டு முதலில் கோவிட் அறிகுறி இருக்கிறது என்று கூறி படுக்கையிலிருந்து அதிகாலை 3 மணிக்கு எழுப்பி எங்கோ கூட்டிச் சென்று சிறிய அறையில் படுக்க வைத்திருக்கிறார்கள். சில மணி நேரத்துக்கெல்லாம், உங்களுக்கு அறிகுறி இல்லையாம் என்று கூறி மீண்டும் அவர் தங்கியிருந்த இடத்துக்குக் கொண்டுவந்து விட்டிருக்கிறார்கள். சில நிமிடங்களுக்கெல்லாம் மறுபடியும் வந்து, உங்களுக்கு கோவிட் இருக்கிறதாம் - அறிகுறி இல்லையென்பது இன்னொருவருக்காம் என்று கூறி முரட்டுத்தனமாக இழுத்துச் சென்றுள்ளனர்.

இப்படி 387 பேர் கோவிட்-19 அறிகுறியோடு இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதில் விளையாட்டு வீரர்கள் மட்டும் எத்தனை பேர் என்று தெரியவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது. பதக்கம்கூட வேண்டாம், இங்கிருந்து தப்பினால் போதும் என்ற மனநிலை சிலருக்கு ஏற்படலாம். இது சர்வதேசப் போட்டிக்கு பெருமை சேர்க்காது.

அமெரிக்காவின் ஃபிகர் ஸ்கேட்டர் வின்சென்ட் ஷூவ், ஆஸ்திரியாவின் ஸ்நோ போர்டர் சபின் ஸ்காஃப்மேன் ஆகியோர் கோவிட் அறிகுறி இருப்பதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் பதக்கம் வெல்ல வேண்டியவர்கள்.

பின்லாந்து ஐஸ் ஹாக்கி அணியின் தலைவர் ஜுக்கா ஜலோனென், மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றம்சாட்டினார். தங்களுடன் வந்துள்ள மருத்துவர், கரோனா இல்லை என்று சான்று கூறிய பிறகும், சோதனையில் தெரிவதாகக் கூறி அணி வீரர் ஒருவரைத் தனி வார்டில் அடைத்துவிட்டனர் சீன அதிகாரிகள் என்று அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்தத் தகவல்கள் குறித்து அதிகாரபூர்வமாக எந்த விளக்கமும் சீனத் தரப்பிலிருந்து வெளியாகவில்லை.

x