உலகின் பனியாறுகளில் எதிர்பார்த்ததைவிட குறைவான பனி: பாதிப்புகள் என்னென்ன?


உலகின் பனியாறுகளில் (glaciers), முன்பு கணித்ததைவிட குறைவான பனியே இருப்பதாக செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ‘நேச்சர் ஜியோசயின்ஸ்’ இதழில் நேற்று (பிப்.7) வெளியான ஆய்வுக் கட்டுரையில் பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக, புவிவெப்பமடைதல் அதிகரித்து பனியாறுகள் உருகி கடல் மட்டம் உயரலாம் எனச் சுற்றுச்சூழல், பருவநிலை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்துவருகின்றனர். உலகின் எல்லா பனியாறுகளும் உருகினால், கடல் மட்டம் 3 அங்குலம் (7.62 சென்டிமீட்டர்) உயரும் என்று தெரியவந்திருக்கிறது.

அதேவேளையில், குறிப்பிட்ட பருவகாலத்தில் பனியாறுகள் உருகுவதால், அவற்றிலிருந்து பாய்ந்துவரும் நீர் ஆறுகளை நிறைத்து, விவசாயத்துக்கும் முக்கிய ஆதாரமாகிறது. தற்போது பனியாறுகளில் குறைவான அளவில் பனி இருப்பதால், எதிர்பார்க்கப்பட்டதைவிட முன்னதாகவே பனி உருகிவிடும் என கணிக்கப்பட்டிருக்கிறது.

பனி உருகுவது என்பது வருடம் முழுவதும் இயல்பாகவே நடக்கக்கூடியதுதான். எனினும், பருவநிலை மாற்றத்தின் காரணமாக அதிகரித்துவரும் வெப்பநிலையால் பனியாறு உருகும் வேகம் அதிகரித்திருக்கிறது. 2000 முதல் 2019 வரை, பனியாறுகளில் 5.4 ட்ரில்லியன் டன் பனிக்கட்டி உருகியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.

ஏற்கெனவே பல நாடுகள் பனியாறுகளை இழக்கத் தொடங்கியிருக்கின்றன. இதையடுத்து, தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுவதைத் தடுக்கும் முயற்சிகளில் அந்நாடுகள் இறங்கியிருக்கின்றன. சிலே நாட்டில் மலைகளில் செயற்கையாகப் பனியாறுகளை உருவாக்க திட்டமிடப்படுகிறது. பெரு நாட்டில் கடல்நீரிலிருந்து குடிநீரை உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்நிலையில், “பனியாறுகளில் எந்த அளவுக்குப் பனி இருக்கிறது என்பதில் நாம் மிகவும் மோசமான புரிதலுடன் இருந்திருக்கிறோம்” எனச் சுட்டிக்காட்டுகிறார் இதுகுறித்து ஆய்வு நடத்திய ரொமேய்ன் மிலன். கிரெநோபிள் ஆல்ப்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பனிப்பாறை / பனியாறு நிபுணரான ரொமேய்ன், ’அல் ஜஸீரா’ இதழுக்கு அளித்த பேட்டியில், “முந்தைய ஆய்வுகள் கிரீன்லாந்து மற்றும் அன்டார்க்டிகா பகுதிகளின் பனிப் படுகைகளின் வெளிப்பகுதிகளில் இரண்டு மடங்கு கூடுதலாகப் பனியாறுகள் இருப்பதாகத் தவறாக மதிப்பிட்டிருக்கின்றன” என்கிறார்.

‘நேச்சர் ஜியோசயின்ஸ்’ இதழில் தற்போது வெளியாகியிருக்கும் ஆய்வறிக்கையில், எவ்வளவு வேகமாகப் பனியாறுகள் உருகி நிலப்பகுதிகளில் பாய்ந்தன என்பது குறித்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வழக்கமாக இதுபோன்ற ஆய்வுகள் பனியாறுகளில் எந்த இடத்தில் பனிப்பாறைகள் திடமாக அல்லது மெல்லியதாக இருக்கும் என்பதைக் கண்டறிய உதவும். எனினும், இதுகுறித்து முழுமையான தகவலைக் கண்டறிய, முந்தைய காலங்களில் பயன்படுத்தப்பட்டுவந்த தொழில்நுட்பங்கள் கைகொடுக்கவில்லை.

கடந்த சில வருடங்களாக அதிகத் துல்லியம் கொண்ட செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. இதில் பனியாறுகள் குறித்து மேலும் தெளிவான தகவல்கள் தெரியவருகின்றன.

2017 மற்றும் 2018-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட 8 லட்சத்துக்கும் அதிகமான படங்களை ஆய்வாளர்கள் தற்போது ஆய்வுசெய்திருக்கின்றனர்.

செயற்கைக்கோள் உதவியுடன் அதிநவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட படங்கள் மூலம் மிகத் துல்லியமான ஆய்வு முடிவுகள் கிடைத்திருக்கின்றன.

தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளின் பனியாறுகளில் முன்பு கணிக்கப்பட்டதைவிட 27 சதவீதம் குறைவாகப் பனி இருப்பதாகவும், 1970-களில் இருந்ததில் 40 சதவீதம் பனியை பெரு நாட்டின் பனியாறுகள் இழந்துவிட்டதாகவும் குறிப்பிடும் ஆய்வாளர்கள், ஆசியாவின் இமயமலைப் பகுதிகளில் முன்பு கணிக்கப்பட்டதைவிட 37 சதவீதம் அதிகமாகப் பனி இருப்பதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ஆண்டிஸ் மலைப்பகுதியில் குறைவான பனியாறுகள் இருப்பதால், பொதுமக்களுக்கு நன்னீர் கிடைப்பது குறைந்துவிடும் என்றும், இமய மலைப் பகுதிகளில் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகப் பனியாறுகள் இருப்பதால் கூடுதலாகவே நன்னீர் கிடைக்கும் என்றும் இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

x