கனடா தலைநகர் ஒட்டாவாவில் நெருக்கடி நிலை பிரகடனம்!


கரோனா தடுப்பூசி கட்டாயப்படுத்தப்படுவதற்கு எதிராக, கனடா தலைநகர் ஒட்டாவாவில் ட்ரக் ஓட்டுநர்கள் நடத்திவரும் போராட்டத்தால் அந்நகரே முடங்கிக்கிடக்கிறது. இதற்கு முன் நடந்திராத அளவுக்கு மிகப் பெரிய அளவில் நடந்துவரும் இந்தப் போராட்டத்தால் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், நெருக்கடி நிலையை ஒட்டாவா மேயர் ஜிம் வாட்ஸன் அமல்படுத்தியிருக்கிறார்.

இதுதொடர்பாக, நேற்று (பிப்.6) அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் போராட்டத்தின் காரணமாக, மக்களின் பாதுகாப்புக்குக் கடும் ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது. அரசின் எல்லா மட்டத்திலிருந்தும் ஆதரவு தேவைப்படுகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

போராட்டக் களத்தில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமான எண்ணிக்கையில் ட்ரக் ஓட்டுநர்கள் குவிந்திருக்கும் நிலையிலும் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது என்று முன்பு கூறியிருந்த ஜிம் வாட்ஸன், தற்போது நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருப்பதையடுத்து என்னென்ன நடவடிக்கைகள் அமல்படுத்தப்படும் என்பதைப் பற்றி விரிவாகச் சொல்லவில்லை.

ஜனவரி 15 முதல் அமெரிக்கா - கனடா எல்லையைக் கடந்து செல்லும் ட்ரக்குகளின் ஓட்டுநர்கள் முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டிருக்க வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது. அத்தியாவசியப் பணியாளர்களின் பட்டியலில் வரும் ட்ரக் ஓட்டுநர்களுக்கு இதற்கு முன்பு தடுப்பூசிகள், தனிமைப்படுத்துதால் உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், கனடா அரசு அறிவித்த கட்டுப்பாடுகளால் வெகுண்டெழுந்த ட்ரக் ஓட்டுநர்கள், ஜனவரி 29-ல் ஒட்டாவாவில் திரண்டு மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திய பாணியில், முகாம்களை அமைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் போராடிவருகின்றனர்.

இவ்விஷயத்தில், அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்யத் தயாராக இல்லை. “2021 தேர்தலின்போது தடுப்பூசியைக் கட்டாயமாக்குவது குறித்து வாக்குறுதி அளித்திருந்தோம். மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்திருக்கும் நாங்கள் அதை இப்போது அமல்படுத்துகிறோம். அவ்வளவுதான்” என்று பொதுமக்கள் பாதுகாப்புத் துறை அமைச்சர் மார்க்கோ மெண்டிசினோ கூறியிருக்கிறார்.

ட்ரக் ஓட்டுநர்கள் நடத்திவரும் போராட்டத்தின்போது வணிக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடந்ததாகவும், இனவெறி ரீதியிலான வசவுகளைப் போராட்டக்காரர்கள் பயன்படுத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. பெருந்தொற்றுக் காலம் என்பதால், முன்களப் பணியாளர்களும் கடும் சிரமத்துக்குள்ளாகினர். போராட்டக்காரர்களில் சிலர் நாஜி கொடிகளை ஏந்தியிருந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தப் போராட்டத்துக்குத் தீவிர வலதுசாரிகள் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். குறிப்பாக, அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ட்ரம்ப் உட்பட குடியரசுக் கட்சியினர் பலர் ட்ரக் ஓட்டுநர்களுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கின்றனர். கோஃபண்ட்மீ எனும் தளத்தின் வழியாகப் போராட்டக்காரர்களுக்கு நிதியுதவியும் வழங்கிவருகின்றனர்.

இதேபோன்ற போராட்டங்கள் டொரன்டோ, க்யூபெக் சிட்டி, வின்னிபெக் போன்ற நகரங்களிலும் நடந்துவருகின்றன. க்யூபெக் சிட்டியில் போராட்டம் நடந்துவந்த நிலையில், அபராதம் விதிக்கப்படும் என உள்ளூர் நிர்வாகம் எச்சரித்ததைத் தொடர்ந்து, 30 ட்ரக்குகள் அங்கிருந்து கிளம்பியிருக்கின்றன.

x