அமெரிக்காவில் தாக்கப்படும் காந்தி சிலைகள்!


நியூயார்க் காந்தி சிலை

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் வைக்கப்பட்டுள்ள காந்தி சிலைகள் சேதப்படுத்தப்படுவதன் வரிசையில், தற்போது மான்ஹாட்டனில் அமைந்திருக்கும் காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

அமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் பொது இடங்கள் மற்றும் பூங்காக்களில் மகாத்மா காந்தியின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. கடந்த சில வருடங்களாக அடையாளம் தெரியாத நபர்களால் அவை சேதப்படுத்தப்படுவது தொடர்கிறது. அந்த வரிசையில், நியூயார்க் நகரின் புறநகர்ப் பகுதியான மான்ஹாட்டனின் சதுக்கம் ஒன்றில் நிறுவப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் வெண்கலச்சிலை சேதமானது தெரியவந்துள்ளது.

8 அடி உயரத்தில் மகாத்மா காந்தியின் முழு உருவத்திலான இந்த வெண்கல சிலையை, நேற்று(பிப்.5) அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். மர்ம நபர்களின் செயலுக்கு இந்திய தூதரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பாகவும் அமெரிக்காவின் வெவ்வேறு நகரங்களில் நிறுவப்பெற்ற காந்தி சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

முன்னதாக கலிபோர்னியாவின் டேவி நகரத்து பூங்காவில் வைக்கப்பட்டிருந்த 294 கிலோ எடை மற்றும் 6 அடி உயரத்திலான, மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, ஜனவரி 27 அன்று மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். அதற்கு முன்பாக, 2020 ஜூனில், வாஷிங்டன் பூங்கா ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் சிலை, ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்டது தொடர்பான மக்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி, மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது.

மகாத்மா காந்தியின் சிலைகளுக்கு, அமெரிக்காவைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினரும், அங்கு வாழும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், காந்தியின் சிலைகள் தொடர்ந்து சேதப்படுத்தப்படுவதின் பின்னணியில், திட்டமிடப்பட்ட போக்கு இருக்கிறதா என்பது குறித்து உள்ளூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

x