ஆப்கானிஸ்தான் மக்களின் நலனுக்காக 3 பில்லியன் டாலரை இந்தியா முதலீடு செய்திருப்பதாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதரன் கூறியிருக்கிறார். மக்களவையில் நேற்று (பிப்.4) இதுதொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், “ஆப்கானிஸ்தானுடனான கூட்டு வளர்ச்சியில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறது. அதன்படி, அந்நாட்டின் 34 மாகாணங்களில் மின்சாரம், குடிநீர் விநியோகம், சாலை வசதி, சுகாதாரம், கல்வி, விவசாயம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கியத் தேவைகளுக்காக 500-க்கும் மேற்பட்ட திட்டங்களில் இந்தியா முதலீடு செய்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக, ஆப்கன் மக்களின் நலனுக்காக 3 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.
இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான உறவு வரலாற்று ரீதியிலானது. யுத்தங்களால் நொடித்திருந்த ஆப்கானிஸ்தானில் மீள்கட்டமைப்பு செய்ய நாடாளுமன்றம், பள்ளி, கல்லூரி, மருத்துவமனைகள், சாலை வசதி, அணை என கடந்த ஆண்டுகளில் இந்தியா மிகப் பெரிய அளவில் முதலீடுகளைச் செய்திருந்தது. ஆப்கன் ஆட்சியை மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றியபோது, தான் மேற்கொண்ட பணிகளை முன்னிறுத்தி இந்தியாவால் தாலிபான்களுக்கு அழுத்தம் தர முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன் முதல் அறிகுறியாக, பாதியில் நிற்கும் கட்டுமானப் பணிகளை இந்தியா தாராளமாகத் தொடரலாம் எனத் தாலிபானும் அறிவித்திருந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டுவந்த திட்டங்கள் தொடர்பாக விளக்கமளித்திருக்கும் அமைச்சர் முரளிதரன், பெரும்பாலான திட்டப் பணிகள் முழுமையாகச் செய்துமுடிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டுவிட்டதாகக் கூறியிருக்கிறார்.
நீண்டகால நட்பு நாடான ஆப்கானிஸ்தானின் சமகால நடப்புகள் குறித்து இந்தியா தொடர்ந்து அக்கறை காட்டிவருவதாகவும், அந்நாட்டின் சூழல்களைத் தொடர்ந்து கண்காணிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.
தாலிபான்களின் ஆட்சியில் ஆப்கன் மக்கள் கடும்பொருளாதார நெருக்கடியில் தவித்துவருகிறார்கள். மேற்கத்திய நாடுகள் அளித்துவந்த நிதியுதவிகள் நிறுத்தப்பட்டதால், பலர் வேலையிழந்தனர். லட்சக்கணக்கானோர் சம்பளம் கிடைக்காமல் தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர். வறுமையின் பிடியில் சிக்கி, உணவுக்காக, தங்கல் உடல் உறுப்புகளையும் குழந்தைகளையும் விற்கும் நிலைக்கு ஏராளமானோர் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.