“ஒமைக்ரானின் பிஏ.1, பிஏ.1.1, பிஏ.1, பிஏ.3 என்ற வெவ்வேறு மாறுபாடு வந்துள்ளன. பிஏ ஒமைக்ரான் வைரசைவிட 1.5 மடங்கு வேகமாக பி.ஏ.2 உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவக்கூடியது. 57 நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது” என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உலகத்தை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பல வகைகளில் உருமாற்றம் அடைந்து மக்களை கொன்று குவித்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் பரவத் தொடங்கிய கரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ், உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் ஒமைக்ரான் பாதிப்பு குறைவாக இருந்தாலும் கரோனா 3-வது அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, ஒமைக்ரான் வைரஸ் பிஏ.1, பிஏ 1.1, பிஏ.2, பிஏ.3 எனவும் உருமாற்றம் அடைந்ததாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. “இன்று உலகம் முழுவதும் பரவியுள்ள ஒமைக்ரான் வைரசில் 96 சதவீத வைரஸ்கள் பிஏ.1 மற்றும் பிஏ 1.1 ஆகிய உருமாற்ற வகைகள். உருமாறிய ஓமைக்ரான் பிஏ.2 என்ற துணை மாறுபாடு உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை 57 நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 10 வாரங்களுக்கு முன்பு கரோனாவின் ஒமைக்ரான் மாறுபாடு தோன்றியதில் இருந்து, இதுவரை 9 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் பதிவான மொத்த பாதிப்பைவிட அதிகம்.
கடந்த ஒரு மாதத்தில் உலகம் முழுதிலும் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 93 சதவீதம் ஒமைக்ரான் வகையைச் சேர்ந்தவை. இதில், ஒமைக்ரானின் பிஏ.1, பிஏ.1.1, பிஏ.1, பிஏ.3 என்ற வெவ்வேறு மாறுபாடுகள் வந்துள்ளன. இவற்றில், பிஏ.1 மற்றும் பிஏ.1.1 ஆகியவை அடையாளம் காணப்பட்ட முதல் ஒமைக்ரான் ஆகும். பிஏ.2 மாறுபாடு கரோனா மாதிரிகள் சோதனையில்கூட பலமுறை தெரியவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, விஞ்ஞானிகள் பிஏ.2 ஐ ஒமைக்ரானின் துணை திரிபு என்று கூறினர்.
பிஏ.2 இன் மரபணு அடையாளம் ஒமைக்ரானில் இருந்து சற்றே வித்தியாசமானது. இது சோதனை செய்வதை கடினமாக்குகிறது. கரோனா மாதிரி சோதனை மூலம் கூட இந்த மாறுபாட்டைக் கண்டறிவது கடினம் என கூறப்படுகிறது. ஒமைக்ரானைவிட அதிக பாதிப்பு ஏற்படுத்தாது. ஆனால், அதிதீவிரமாக பரவக்கூடியது என ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே டென்மார்க் நாட்டில் புதிய ஒமைக்ரான் வைரஸால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டில் தினமும் பதிவாகும் கரோனா வைரஸில் 82 சதவீதம் புதிய உருமாறிய ஒமைக்ரான் பிஏ.2 என்று தெரியவந்துள்ளது. பிஏ ஒமைக்ரான் வைரஸைவிட 1.5 மடங்கு வேகமாக பி.ஏ.2 உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பரவக்கூடியது” என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.