‘இனவெறியுடன் செயல்படுகிறது இஸ்ரேல்!’


பாலஸ்தீனர்கள் மீது இனவெறி அடிப்படையில் அடக்குமுறையில் இஸ்ரேல் அரசு செயல்படுவதாக ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு தெரிவித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட இனக் குழுவாக பாலஸ்தீனர்களை இஸ்ரேல் நடத்துவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறது.

இதுதொடர்பாக நேற்று 280 பக்க அறிக்கையை அந்த அமைப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், பாலஸ்தீனர்களின் நிலங்களையும் சொத்துக்களையும் கைப்பற்றுவது, படுகொலைகள், கட்டாயமாக இடமாற்றுவது, நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது, சிறையில் அடைப்பது, குடியுரிமை மறுக்கப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு செயல்களில் இஸ்ரேல் ஈடுபடுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இவை இனவெறிக்கு எதிரான சர்வதேசச் சட்டத்தை மீறும் செயல்கள் என ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கூறியிருக்கிறது.

இஸ்ரேல் பதிலடி

எனினும், இந்தக் குற்றச்சாட்டை இஸ்ரேல் வன்மையாக மறுத்திருக்கிறது. இது உண்மைக்குப் புறம்பான அறிக்கை எனக் கூறியிருக்கும் இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் யாயிர் லாபிட், “பயங்கரவாத அமைப்புகள் சொல்லும் அதே பொய்களை ஆம்னெஸ்டி அமைப்பு எதிரொலிக்கிறது” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

அத்துடன், யூத எதிர்ப்புணர்வின் காரணமாகவே ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் இப்படியான குற்றச்சாட்டை முன்வைக்கிறது என்றும் அவர் கூறியிருக்கிறார். எனினும், இஸ்ரேலின் மனித உரிமை மீறல்களைப் பற்றி குரல் எழுப்புபவர்களை, யூத எதிர்ப்புணர்வு கொண்டவர்கள் எனக் குற்றம்சாட்டும் போக்கு இஸ்ரேலிடம் உண்டு என மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.

இதற்கிடையே, ஆம்னெஸ்டி வெளியிட்ட அறிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்திருக்கிறது. “இந்த அறிக்கை அபத்தமானது” என இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதர் தாமஸ் நைட்ஸ் கூறியிருக்கிறார். ““இஸ்ரேலின் நடவடிக்கைகளை இனவெறியாக அடையாளப்படுத்தும் கருத்தை நாங்கள் நிராகரிக்கிறோம். இப்படியான பதங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை ஒருபோதும் பயன்படுத்தியதில்லை” என அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் கூறியிருக்கிறார்.

x