தாலிபான்களால் கடத்தப்பட்ட 2 பத்திரிகையாளர்கள்!


ஆப்கானிஸ்தானில், ‘ஏரியானா டிவி’ எனும் செய்தி சேனலைச் சேர்ந்த வாரிஸ் ஹஸ்ரத், அஸ்லம் ஹிஜாப் ஆகிய இரண்டு ஊடகர்கள் நேற்று (பிப்.1) தாலிபான் ஆட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்டனர். அந்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர் சங்கமான ’தி ஆப்கன் மீடியா அசோசியேஷன்’ இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது. ‘ஃப்ரீ ஸ்பீச் ஹப்’ எனும் அமைப்பும் இது குறித்து செய்திக்குறிப்பை வெளியிட்டது.

ஏரியானா செய்தி சேனல் அலுவலகத்திலிருந்து, உணவு அருந்த வெளியே சென்ற இருவரையும், துப்பாக்கி ஏந்திய, முகமூடி அணிந்த சிலர் கடத்திச் சென்றதாக அந்தச் சேனலைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறியிருக்கிறார்.

இந்நிலையில், அவர்களைப் பற்றிய தகவல் தெரிவிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல், ஆப்கனுக்கான ஐநா உதவி மையம் ஆகியவை தாலிபான்களை வலியுறுத்தியிருக்கின்றன. உடனடியாக அவர்களை விடுவிக்குமாறு ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு ட்வீட் செய்திருக்கிறது.

இதற்கிடையே, அந்த ஊடகர்கள் குறித்து எந்தத் தகவலும் தெரியாது என்று ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தாலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர், மகளிர் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திவந்த இரண்டு பெண்கள் காணாமல் போயினர். இதுவரை அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது குறித்து எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. அவர்களைப் பற்றியும் தங்களுக்குத் தகவல் தெரியாது என தாலிபான்கள் மறுத்திருக்கின்றனர்.

ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்தது முதல், பத்திரிகையாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தாலிபான் ஆட்சிக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டங்கள் குறித்து செய்தி சேகரித்த ஊடகர்களைத் தாலிபான்கள் தாக்கினர். பல ஊடக நிறுவனங்களில் பணிபுரிந்துவந்த பெண் பத்திரிகையாளர்களில் 50 சதவீதம் பேர் வேலையைவிட்டு நின்றுவிட்டதாக, 15 ஆப்கன் செய்தி நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.

தாலிபான்களின் அடிப்படைவாதக் கொள்கைகள், பெண்களின் உரிமைகள் மறுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ஆப்கனுக்கு அளித்துவந்த நிதியுதவிகளை மேற்கத்திய நாடுகள் நிறுத்திவிட்டன. இதனால், ஆப்கன் மக்கள் வேலை இழந்து, வாழ்வாதாரம் இழந்து தவித்துவருகின்றனர்.

ஆப்கனில் 97 சதவீத மக்கள் வறுகைக்கோட்டுக்கு கீழே வீழ்ந்திருப்பதாகவும், உணவுக்காக தமது உடல் உள்ளுறுப்புகளையும் விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக ஐநாவின் உலக உணவு திட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

x