ஓராண்டாக உழன்றுவரும் மியான்மர்: ஒதுங்கி நிற்கிறதா உலகம்?


மியான்மரில், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் ஓராண்டாகிறது. தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் குற்றம்சாட்டிவந்த ராணுவம், 2021 பிப்ரவரி 1-ல், மியான்மரின் ஆட்சிப்பொறுப்பை கைக்கொண்டது. ஆங் சான் சூச்சி உள்ளிட்ட தலைவர்களைக் கைதுசெய்து வீட்டுச் சிறையில் அடைத்தது.

ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டியது, உரிமம் இல்லாத வாக்கி-டாக்கி வைத்திருந்தது, 2020 தேர்தல் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறியது என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன. வழக்கு விசாரணைகளுக்காக தலைநகர் நேபியேட்டோவில் உள்ள நீதிமன்றத்தில் அவர் அவ்வப்போது ஆஜர்படுத்தப்படுகிறார். ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்களைத் தூண்டிய வழக்கில், கடந்த டிசம்பர் மாதம் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஜனவரி 10-ல் உரிமம் இல்லாத வாக்கி-டாக்கி வைத்திருந்தது, 2020 தேர்தல் நேரத்தில் கரோனா கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் சேர்த்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆங் சான் சூச்சி, வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டாலும் இப்போதுவரை எந்த இடத்தில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் எனும் தகவல் வெளியிடப்படவில்லை.

ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற ராணுவத் தளபதி மின் ஆங் லாய்ங்கின் உத்தரவின் பேரில் ஏராளமான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். கடந்த சில மாதங்களாகப் பொதுமக்கள், போராட்டக்காரர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருக்கின்றன. கண்ணீர் புகைக்குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு என்பதையெல்லாம் தாண்டி வான்வழித் தாக்குதல்கள், ஒட்டுமொத்த கிராமத்தையும் தீவைத்து எரிப்பது என மிகக் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள் மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள்.

ராணுவப் புரட்சி நடந்த பிப்ரவரி 1-ம் தேதி முதல் இன்றுவரை 1,500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என அரசியல் கைதிகளுக்கான உதவி சங்கம் பதிவுசெய்திருக்கிறது. அரசியல் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் உட்பட 10,000-க்கும் மேற்பட்டோர் பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இந்நிலையில், ஓராண்டாகியும் உலகம் தங்களைக் கண்டுகொள்ளவில்லை எனும் வருத்தத்தில் இருக்கின்றனர் மியான்மர் மக்கள். குறிப்பாக, ராணுவத்தால் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்ட தலைவர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய தேசிய ஒற்றுமை அரசு (என்யூஜி) தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக, அந்த அரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜின் மார் ஆங், ‘அல் ஜஸீரா’ ஊடகத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், “எங்களுக்காக உலகம் ஒன்றுமே செய்யவில்லை. வெறுமனே உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறது” என்று வேதனை தெரிவித்திருக்கிறார். “கடந்த ஓராண்டாக மிகக் கடுமையான அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. எனினும், இளம் தலைமுறையினர் இந்த ஆட்சியை ஏற்க மறுத்து தொடர்ந்து போராடிவருகிறார்கள்” என அவர் கூறியிருக்கிறார்.

ஆங் சான் சூச்சியைப் போலவே, ராணுவத்தின் அடக்குமுறைகளைப் பல ஆண்டுகளாக எதிர்கொண்டவர் ஜின் மார் ஆங். அரசியல் செயல்பாடுகள் காரணமாக, 1998-ல் அவரைக் கைதுசெய்து தனிமைச் சிறையில் வைத்த ராணுவம், 11 ஆண்டுகள் கழித்துதான் அவரை விடுவித்தது.

1980-கள், 90-களில் ராணுவ ஆட்சியில் இருந்ததைவிட இப்போது மிகக் கடுமையான வன்முறைச் சம்பவங்கள் நடப்பதாகவும் பலர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்படுவதாகவும் அவர் கூறியிருக்கிறார். முன்பெல்லாம் திரைமறைவில் செய்யப்பட்டுவந்த அக்கிரமங்கள் தற்போது பட்டவர்த்தனமாக மேற்கொள்ளப்படுவதாகவும் சர்வதேசச் சமுதாயம் தலையிடாவிட்டால் இந்நிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பல ராணுவ அதிகாரிகள் மீதும், ராணுவத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா, கனடா, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை விதித்திருக்கின்றன.

எனினும், ராணுவம் அரங்கேற்றிவரும் அடக்குமுறைகளையும் படுகொலைகளையும் தடுக்க இந்நடவடிக்கைகள் மட்டும் போதுமா என்பதுதான் மியான்மரில் ஜனநாயகக் காற்றை சுவாசிக்கப் போராடுபவர்களின் கருத்து.

x