கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கரோனா!


மனைவி, பிள்ளைகளுடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தான் நலமாக இருப்பதாகவும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கனடாவில், எல்லையைக் கடந்து செல்லும் லாரி டிரைவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் என அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில் அறிவித்தார். இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து கட்டாய தடுப்பூசிக்கு எதிராக பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது. தலைநகர் ஒட்டாவாவில் ஆயிரக்கணக்கான லாரி டிரைவர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுடன் அரசின் பிற கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நூற்றுக்கணக்கானோரும் கைக்கோர்த்ததால், போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. தொடர் போராட்டம் காரணமாக ஒட்டாவாவில் பதற்றம் நீடிப்பதால், பாதுகாப்பு கருதி பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அவரது குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், தான் நலமாக இருப்பதாகவும், கரோனா சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றி பணியை ஆன்லைன் வாயிலாக தொடர இருப்பதாகவும் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் ஜஸ்டீன் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

x