சமீபகாலமாக பவுத்த மடாலயங்களுக்குச் செல்வது, பவுத்த துறவிகளைச் சந்திப்பது, நன்கொடை வழங்குவது எனத் தீவிர பவுத்த சாயத்தைப் பூசிக்கொள்ளும் வேலையில் இறங்கியிருக்கிறார் மியான்மரின் ராணுவ ஆட்சியாளரான மின் ஆங் லாய்ங். பவுத்த துறவிகளுடனான அவரது சந்திப்புகள் குறித்த செய்திகளும் படங்களும் பத்திரிகைகளில் தவறாமல் இடம்பிடிக்கின்றன. மின் ஆங் லாய்ங்கு அடுத்து அதிகாரம் பெற்றவரான ஜெனரல் சோ வின், கடந்த செப்டம்பர் மாதம், ஆயுதக் கொள்முதல் ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக ரஷ்யா சென்றிருந்தபோது, சர்ச்சைப் பேச்சுகளுக்குச் சொந்தக்காரரான பவுத்தத் துறவி சித்தாகு சயதாவும் அவருடன் சென்றிருந்தார். இந்நகர்வுகள், மியான்மர் ராணுவத்தின் மிக முக்கியமான முடிவுகளில் பவுத்தத் துறவிகளின் பங்களிப்பு இருக்கிறது என்றும், ராணுவத்துக்கு பவுத்த மத ஆதரவு இருக்கிறது என்றும் நிறுவும் முயற்சி என்றே கருதப்படுகிறது.
மியான்மர் மக்கள், சர்வதேசச் சமூகம் என எல்லாத் தரப்பினரின் வெறுப்பையும் எதிர்கொள்ளும் ராணுவ ஆட்சியாளர்கள், அந்தப் பிம்பத்தை மாற்றி பவுத்த ஆதரவு அரசாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கின்றனர்.
கரோனா அபாயத்துக்கு நடுவே, 2020 நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் (‘நேஷனல் லீக் ஃபார் டெமாக்ரஸி’ - என்எல்டி) அபார வெற்றி பெற்றது. ராணுவத்தின் ஆதரவு பெற்ற யூனியன் சாலிடாரிட்டி அண்ட் டெவலப்மென்ட் (யூஎஸ்டிபி) கட்சிக்குக் கடும் தோல்வியே கிடைத்தது. எனினும், அந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததாக ராணுவம் குற்றம்சாட்டியது. 2021 பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சியை ராணுவம் கைப்பற்றியது. ஆங் சான் சூச்சி உட்பட பல தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து மியான்மர் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆட்சியாளராகப் பொறுப்பேற்ற ராணுவத் தளபதி மின் ஆங் லாய்ங்கின் உத்தரவின் பேரில் ஏராளமான பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் அமைதி வழியிலேயே மக்கள் போராடிவந்தனர். எனினும், ராணுவம் தொடர்ந்து அடக்குமுறையைக் கையாள்வதால், மக்கள் பாதுகாப்புப் படை (பிடிஎஃப்) எனும் பெயரில் ஆயுதம் தாங்கிய போராட்டத்தையும் சிலர் முன்னெடுத்திருக்கின்றனர்.
ராணுவ ஆட்சியின் அடக்குமுறைகளை, சர்வதேசச் சமூகம் தொடர்ந்து கண்டித்துவருகிறது. பல ராணுவ அதிகாரிகள் மீதும், ராணுவத்துக்குச் சொந்தமான நிறுவனங்கள் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் விதித்திருக்கின்றன. இப்படி சர்வதேச அளவில் புறக்கணிப்புக்கும் கண்டிப்புக்கும் ஆளாவதால், அதைச் சரிகட்ட மியான்மர் ராணுவ ஆட்சியாளர்கள் முயற்சி செய்துவருகிறார்கள். பவுத்த பிம்பத்தைக் கைக்கொள்ள ராணுவம் முயல்வதன் பின்னணி இதுதான்.
ராணுவப் புரட்சிக்குப் பின்னர், பவுத்தத்துக்கான மியான்மர் ராணுவத்தின் ஆதரவு கிட்டத்தட்ட 4 மடங்கு அதிகரித்திருப்பதாக அமெரிக்க அமைதி நிறுவனம் (யூஎஸ்ஐபி) கூறியிருக்கிறது. ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராகத் தீவிர வெறுப்புப் பிரச்சாரம் செய்பவரும், பவுத்த தேசியவாத கொள்கை கொண்ட துறவியுமான ஆஷின் விராத்து கடந்த செப்டம்பர் மாதம் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டதும் இதன் ஒரு பகுதிதான்.
அதேவேளையில், பவுத்த தேசியவாதக் கொள்கையை மியான்மர் ராணுவம் முழுமையாகக் கைக்கொண்டுவிடவில்லை. எனினும், தீவிர பவுத்தர்களின் மனதைக் கவர இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது எனக் கருதப்படுகிறது.
பவுத்தம் வலியுறுத்தும் முக்கியக் கொள்கைகளில் ஒன்று ‘கொல்லாமை’. ஆனால், ராணுவம் தொடர்ந்து எதிர்ப்பாளர்களையும் பொதுமக்களையும் கொன்றுகுவித்துவருவதால், இந்த பிம்பம் எடுபடுமா என்பது முக்கியக் கேள்வி. 2017-ல் வங்கதேச எல்லையில் உள்ள ராக்கைன் மாகாணத்தில் மியான்மர் ராணுவமும், மதவெறி கொண்ட பவுத்த அமைப்புகளும், பொதுமக்களில் சிலரும் இணைந்து நிகழ்த்திய மிகக் கொடூரமான வன்முறையை உலகம் மறந்துவிடாது. அந்தப் படுகொலைகளுக்கு எதிராக ஆங் சான் சூச்சி வாய் திறக்கவில்லை என்பது வேறு விஷயம்.
எனினும், இதற்கு முன் இல்லாத அளவுக்கு பவுத்தர்களுக்கு அளிக்கும் ஆதரவு வழங்கப்படுவதாகக் கட்டமைக்க மியான்மர் ராணுவம் விரும்புகிறது. ஆங் சான் சூச்சியும் என்எல்டி அரசும் பவுத்தத்துக்குப் போதுமான ஆதரவு அளிக்கவில்லை என மின் ஆங் லாய்ங் பேசிவருகிறார்.
ராணுவத்தின் இம்முயற்சியை பவுத்த துறவிகள் அனைவரும் ரசிக்கிறார்கள் என்றும் சொல்லிவிட முடியாது. ராணுவப் புரட்சிக்குப் பின்னர், மின் ஆங் லாய்ங் தனக்கு ஆதரவு திரட்ட பவுத்த துறவிகளுக்கு லஞ்சம் கொடுக்கிறார் என்றும் எதிர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. ராணுவத்துக்கு ஆதரவாகவும் மக்கள் போராட்டத்துக்கு எதிராகவும் நிற்பதாகத் தங்களை யாரும் கருத வேண்டாம் என்றும், தேசத்தை ஆளும் பொறுப்பை ராணுவம் கைக்கொண்டதைத் தாங்கள் விரும்பவில்லை என்றும் பவுத்தத் துறவிகள் பலர் கூறுகின்றனர். சாமானிய மக்களைப் போல தாங்களும் ராணுவ ஆட்சியால் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக பவுத்தத் துறவிகள் கூறியிருக்கிறார்கள். ராணுவ ஆட்சிக்கு எதிராக பவுத்தத் துறவிகள் போராட்டம் நடத்திவருவதும் குறிப்பிடத்தக்கது.