பாகிஸ்தானில், முந்தைய இரண்டு ஆண்டுகளை ஒப்பிட 2021-ல் ஊடகச் சுதந்திரத்தின் நிலை மிகவும் சீர்கெட்டிருப்பதாக பாகிஸ்தான் நாளிதழ் ஆசிரியர்கள் கவுன்சில் (சிபிஎன்இ) தெரிவித்திருக்கிறது.
இந்த அமைப்பின் சார்பில் ’பாகிஸ்தான் ஊடகச் சுதந்திரம் அறிக்கை - 2021’ எனும் அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. இதுகுறித்த செய்தி ‘தி எக்ஸ்ப்ரஸ் ட்ரிப்யூன்’ எனும் நாளிதழில் வெளியாகியிருக்கிறது. ஊடகச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், தகவல்களைப் பெறும் உரிமை போன்றவற்றை முடக்கும் முயற்சிகள் பாகிஸ்தானில் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஊடக நிறுவனங்கள், ஊடகர்கள், ஊடகத் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் பாதிப்பைச் சந்தித்திருப்பதாகக் கூறுகிறது அந்த அறிக்கை.
படுகொலை செய்யப்படும் பத்திரிகையாளர்கள்
2021-ல் மட்டும், பணியில் இருக்கும்போது கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை 5. கராச்சியில் இயங்கிவந்த சமூக ஊடகச் செயல்பாட்டாளரும் பத்திரிகையாளருமான நஜீம் ஜோக்கியோ கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. மேலும் பல பத்திரிகையாளர்கள் துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருக்கலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பலர் கொலை மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்கள். பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, அவர்களது குடும்பத்தினரும் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள் எனும் தகவல் அதிரவைக்கிறது.
ஊடகச் சுதந்திரம் மீதான தாக்குதல் அதிகரித்துவரும் நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று எனக் கூறும் அந்த அறிக்கை, பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்த குற்றவாளிகளில் ஒருவர்கூட இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்றும் பதிவுசெய்திருக்கிறது.
பெருந்தொற்று மரணங்கள்
கரோனா பாதிப்பால் 9 பத்திரிகையாளர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழப்பின் காரணமாக 2 பத்திரிகையாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர்.
உலகம் முழுதும் முடக்கப்படும் ஊடகர்கள்!