ஆப்கனில் கடும் பஞ்சம்: உணவுக்காக உடல் உள்ளுறுப்புகளை விற்கும் மக்கள்


பஞ்சத்தால் அல்லாடும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவுமாறு சர்வதேச சமூகத்திடம் கையேந்துகிறது ஐநா. ஆப்கனில் 97 சதவீத மக்கள் வறுகைக்கோட்டுக்கு கீழே வீழ்ந்திருப்பதாகவும், உணவுக்காக தமது உடல் உள்ளுறுப்புகளையும் விற்கத் துணிவதாக ஐநாவின் உலக உணவு திட்ட அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒசாமா பின்லேடனும் பின்னே அவரை விரட்டிக்கொண்டு அமெரிக்காவும், ஆப்கானிஸ்தானில் கால்வைத்ததில் கடந்த 20 ஆண்டுகளாகவே படிப்படியாக அவதியடைந்து வருகிறது ஆப்கன் தேசம். ஆட்சி மாற்றத்தால் நிகழ்ந்த நிர்வாகக் குழப்பங்கள், காலியான கஜானா, அதன் காரணத்திலான பொருளாதார சீரழிவு, நாடெங்கும் தலைவிரித்தாடும் பஞ்சம், பட்டினி, அதற்குக் காரணமான வறட்சி, இவையெல்லாம் போதாதென்று பெருந்தொற்றுப் பரவல் என எல்லா திசைகளிலும் ஆப்கனை சூழ்ந்த இன்னல்களால் அம்மக்கள் பெரும் அவதியில் தவித்து வருகின்றனர்.

இவை குறித்து அண்மையில் கூடி விவாதித்த ஐநாவின் உலக உணவு திட்டத்தின் அதிகாரிகள், செழிப்பான தேசங்களும், சர்வதேச சமூகமும் பசியால் தவிக்கும் ஆப்கன் மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் “ஆப்கானிஸ்தானின் 4 கோடி மக்களில் 2.3 கோடி மக்கள் கடும் உணவுப் பற்றாக்குறையில் தவித்து வருவதாகவும், நாட்டின் 97 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வீழ்ந்திருப்பதாகவும் அந்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். உலகக் கோடீஸ்வர நிறுவனங்கள் தங்கள் ஒருநாள் லாபத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தால்கூட, அவை ஆப்கன் மக்களுக்கு பேருதவியாய் இருக்கும்’’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அமெரிக்காவுக்கு எதிரான போர்க்களத்திலும், பெண்களுக்கு எதிரான கட்டுப்பாடுகளிலும் வேகம் காட்டிய தாலிபான்களுக்கு, நிர்வாகத்திறனோ, நாட்டை கட்டியாள்வதற்கான நிதியை சேகரிக்கும் நுட்பமோ இன்னமும் பிடிபடவில்லை. சர்வதேச வங்கிகளில் உள்ள ஆப்கன் அரசின் நிதியை திரும்பப்பெறுவதற்கான முயற்சிகளும் நடைமுறையில் முழுதுமாய் கைகொடுக்கவில்லை. ஏழை நாடுகளின் வரிசையில் முன்னேறி வரும் தேசத்தையும், அதன் பட்டினி மக்களையும் எத்தனை நாட்களுக்கு துப்பாக்கி முன்பாக மண்டியிடச் செய்ய முடியும் என்ற கவலையும் தாலிபான்களுக்கு தற்போது எழுந்திருக்கிறது.

x