இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டமைப்பதற்காக, இந்தியாவை களமாகக் கொண்டு முன்னாள் புலிகள் சிலர் சட்டவிரோத செயல்களை மேற்கொண்டு வருவதாக, என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் முன்னாள் புலிகள் சிலரையும் தனது விசாரணை வளையத்துக்குள் என்ஐஏ கொண்டு வந்துள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி இந்த ஆண்டு ஜன.18 வரை, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளகர்த்தாக்கள் என சொல்லப்படும் சிலரை, இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ தனது விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளது. போலி ஆவணங்கள் உதவியுடன் இந்தியாவில் தங்கியது, இந்திய வங்கிகளில் கணக்கு ஆரம்பித்து பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டது, பாஸ்போர்ட் பெற்றது, ஆயுதங்கள் முதல் போதைப் பொருட்கள் வரை கடத்தியது என முன்னாள் புலிகள் சிலர் மேற்கொண்ட சட்ட விரோத நடவடிக்கைகளை கண்டறிந்துள்ளதாக, என்ஐஏ அதிகாரிகள் தற்போது சில தகவல்களை கசிய விட்டுள்ளனர். கடந்த 10 மாதங்களில், என்ஐஏ விசாரணையில் பிடிபட்ட முன்னாள் புலிகள் குறித்த துண்டுத்துண்டான தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவற்றில் முதலாவது நபர் மேரி பிரான்சிஸ்கா. இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண்மணியான இவர், 2019-ல் இந்தியா வந்துள்ளார். சென்னையில் தங்கியிருந்த இவர், சில போலி ஆவணங்களைக் கொண்டு சென்னை மண்டல போஸ்போர்ட் அலுவலகத்தில் புதிய பாஸ்போர்ட் பெற்றிருக்கிறார். மும்பை இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக் கிளை உட்பட பல வங்கிகளில் இவர் பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வந்திருக்கிறார். கடந்த அக்.1 அன்று, பெங்களூர் வழியாக மும்பை செல்ல முயன்ற மேரி பிரான்சிஸ்காவை, சென்னை விமான நிலையத்தில் தமிழக போலீஸார் கைது செய்தனர். பின்னர் என்ஐஏ வசம் இவர் ஒப்படைக்கப்பட்டார்.
சுற்றுலா விசாவில் தமிழகம் வந்த மேரி பிரான்சிஸ்கா, கரோனா தொற்றுப் பரவல் காரணமாக இங்கேயே தங்கிவிட்டதாக முதல் சுற்று விசாரணையில் தெரிவித்திருக்கிறார். பின்னர், வேறு சில விசாரணைகளின் அடிப்படையில் அவர் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்று என்ஐஏ உறுதி செய்தது. இவருடன் கென்னிஸ்டன் ஃபெர்னாண்டோ, கே.பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், எல்.செல்லமுத்து என மேலும் 4 முன்னாள் புலிகளையும் இந்த ஜனவரியில் என்ஐஏ தனது விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளது. இவர்கள் அனைவரும் போலியான இந்திய ஆவணங்களை உருவாக்கி பாஸ்போர்ட் முதல் வங்கிக் கணக்குகள்வரை பயன்படுத்தி வருவதாகவும், ஆயுதம் மற்றும் போதைக் கடத்தல் வாயிலாக நிதி சேகரித்து அவற்றை இலங்கைக்கு அனுப்பி வருவதாகவும் என்ஐஏ தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் புலிகள் ஆதரவாளர்கள் சிலருடன் இவர்கள் இணைந்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
என்ஐஏ வெளியிட்ட தகவல்களில் ஒன்றாக, கடந்த மார்ச்சில் கைது செய்யப்பட்ட சத்குணம் என்கிற சபேசன் தொடர்பாக, என்ஐஏ மீண்டும் துழாவத் தொடங்கியுள்ளது. இந்த சபேசன், புலிகளின் உளவுப் பிரிவை சேர்ந்த முன்னாள் அதிகாரி என சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பு வகித்த பொட்டு அம்மானுக்கு அடுத்தகட்ட பொறுப்பாளராக இருந்தவர் கபிலன். இந்தக் கபிலனின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டவர் சபேசன் என்கிறார்கள்.
புலிகள் உயர்மட்டத்தில் செல்வாக்கோடு இருந்த சபேசன், சில தேவைகளுக்காக 2005-ல் தமிழகம் வந்திருக்கிறார். அவரது சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக க்யூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 5 ஆண்டுகள் வரையில் சிறையில் இருந்திருக்கிறார். 2011 வாக்கில் வெளியில் வந்தவர், போலீஸார் பார்வைக்கு சாதாரண பிழைப்பு நடத்துவதுபோல சில ஆண்டுகள் போக்கு காட்டியுள்ளார். அதன் பின்னர் பாகிஸ்தான் தொடர்புகள் வாயிலாக போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியது தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு பிடிபட்டார்.
லட்சத்தீவு பகுதியில் 5 ஏ.கே47 துப்பாக்கிகள், 9 எம்.எம் துப்பாக்கிக்கான ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள், 300 கிகி ஹெராயின் ஆகியவற்றுடன் இந்திய கடலோரக் காவல் படையின் ரோந்து நடவடிக்கையில் சிலர் பிடிபட்டபோது, அந்த விசாரணையின் தொடர்ச்சியாக சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த சபேசன் கைது செய்யப்பட்டார். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, போதைப்பொருள் கடத்தல் வாயிலாக பெருந்தொகையைச் சேகரித்து, ஆயுதக் கொள்முதல் செய்ததுடன் அவற்றை இலங்கைக்கு அனுப்பி வந்ததாகவும் சபேசன் கைதானார். சபேசனின் உள்ளூர் தொடர்புகள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் இருந்து அவருடன் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டவர்கள் குறித்தும் என்ஐஏ விசாரித்து வருகிறது.
சபேசனில் தொடங்கி மேரி பிரான்சிஸ்கா வரையிலான கடந்த 10 மாதத்தின் கைதுகள் மற்றும் விசாரணையின் விபரங்கள் தற்போது என்ஐஏ வாயிலாக தலைநகர் டெல்லியில் வைத்து வெளியாகி இருப்பதன் பின்னணியும் விவாதத்துக்கும் உரியது. குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்கள், மத்திய உள்துறை மற்றும் புலனாய்வு அமைப்பினர் வாயிலாக நெருக்கமான பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்ளப்படுவது வழக்கம். இம்முறை இதர எல்லையோர மாநிலங்களின் வரிசையில் தமிழகமும் அதிக கரிசனத்துடன் விவாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றின் பின்னணியில், தமிழகத்தில் மீண்டும் புலிகள் ஆதரவு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருவதான கேள்விகளும் அடங்கும். மத்திய - மாநில உறவு சீர்குலைந்திருப்பது, தமிழகத்தின் கவர்னராக முன்னாள் உளவுத்துறை அதிகாரி பணியாற்றுவது, கடலோர காவல் தொடர்பான புலனாய்வு தகவல்களை அவர் கேட்டுப் பெறுவதுமான இதர தகவல்களும் இந்தப் பின்னணியில் அடங்கும். விரைவில் தமிழகத்தில் நிகழ்ந்து வருவதாகச் சொல்லப்படும் சில நிழல் நடவடிக்கைகள் குறித்தும், சட்டவிரோத அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்தும், ஒட்டுமொத்த சட்டம் ஒழுங்கு குறித்தும் மத்திய உள்துறை கேள்வி எழுப்பவும் கூடும் என்கிறார்கள்.