ஜார்ஜ் ஃப்ளாய்டு படுகொலை: எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்த்த போலீஸார்!


2020-ல் மே மாதம் அமெரிக்காவில் கரோனா பரவலின் முதல் அலை உச்சத்தில் இருந்த நிலையில், மின்னசொட்டா மாநிலத்தின் மின்னியாபோலிஸ் நகரில், போலீஸ்காரர் ஒருவரால் குரல்வளை நசுக்கப்பட்டு சுவாசிக்க முடியாமல் உயிரிழந்தார் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்டு.

மே 25 இரவு 8 மணி அளவில், மின்னியாபோலிஸ் நகரில் உள்ள ‘கப் ஃபுட்ஸ்’ எனும் பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்த ஃப்ளாய்டு, ஒரு பாக்கெட் சிகரெட் வாங்கினார். அதற்காக அவர் கொடுத்த 20 டாலர் நோட்டு கள்ளநோட்டு என்று அந்த அங்காடியின் சிப்பந்திகள் கருதி போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.

அங்காடிக்கு வெளியில் தனது காரில் அமர்ந்திருந்த அவரை டெரெக் சாவின், டோ தாவோ, தாமஸ் லேன், அலெக்ஸாண்டர் குயெங் ஆகிய நான்கு காவலர்கள் அணுகினர். அவர் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையிலும் அவரை வலுக்கட்டாயமாகக் காரிலிருந்து வெளியில் இழுத்து, அவரைத் தரையில் படுக்கவைத்து அவரது கழுத்தில் தனது முழங்காலை வைத்து அழுத்தினார் டெரெக் சாவின். அருகில் இருந்தவர்கள் அதை வேடிக்கை பார்ப்பதையும், படமெடுப்பதையும் தடுக்கும் வகையில் அந்தக் காட்சியை மறைத்தவாறு டோ தாவோ, தாமஸ் லேன், அலெக்ஸாண்டர் குயெங் ஆகிய மூவரும் நின்றனர். அவ்வப்போது ஜார்ஜ் ஃப்ளாய்டின் முதுகிலும் முழங்காலை வைத்து அழுத்தினர். 9 நிமிடங்களுக்கும் மேலாக மூச்சுத் திணறி அந்தக் கறுப்பின மனிதர் பரிதாபமாக உயிரிழந்தார். “என்னால் மூச்சுவிட முடியவில்லை. என் வயிறு எரிகிறது. கழுத்து வலிக்கிறது” என்று அவர் கதறியதைக் காவலர்கள் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை.

டார்னெல்லா ஃப்ரேஸியர் எனும் 17 வயது பெண் அந்தச் சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பெரும் போராட்டம் வெடித்தது. நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கொலைக் குற்றம் மற்றும் உயிரிழப்புக் காரணமாக இருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, டெரெக் சாவின் சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 22.5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

டோ தாவோ, தாமஸ் லேன், அலெக்ஸாண்டர் குயெங் ஆகிய மூன்று காவலர்களும் ஜார்ஜ் ஃப்ளாய்டு தனது சிவில் உரிமைகளை இழக்கும் நிலைக்குத் தள்ளினர் என அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு மருத்துவ உதவி செய்யத் தவறிவிட்டதாகவும் அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பான சிவில் உரிமை விசாரணைகள் தற்போது நடந்துவருகின்றன. நேற்று நடந்த விசாரணையில் அரசுத் தரப்பு வழக்கறிஞர் சமந்தா த்ரிப்பெல் கூறியிருக்கும் தகவல்கள் கல்நெஞ்சத்தையும் கலங்கச் செய்கின்றன.

“தங்கள் கண் எதிரே டெரெக் சாவின், ஜார்ஜ் ஃப்ளாய்டின் கழுத்தில் முழங்காலை வைத்து அழுத்திக் கொலை செய்தபோது, மூவரும் அருகில் குனிந்து நின்று நொடிக்கு நொடி, நிமிடத்துக்கு நிமிடம் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்” என்று சமந்தா தெரிவித்திருக்கிறார். ஜார்ஜ் ஃப்ளாய்டுக்கு உதவாமல் அலட்சியம் காட்டியதன் மூலம், மூவரும் தங்கள் பதவிப்பிரமாண உறுதிமொழியை மீறிவிட்டனர் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும், சாவின் நடந்துகொண்ட விதத்துக்கு, குற்ற வகையிலான பொறுப்பு அவர்களுக்கு இருக்கவில்லை என மூவருக்கும் ஆதரவாக ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டிருக்கின்றனர். “ஜார்ஜ் ஃப்ளாய்டின் மரணம் ஒரு துயரச் சம்பவம்தான். எனினும், ஒரு துயரச் சம்பவம் ஒரு குற்றமாகாது” என டோ தாவோவின் வழக்கறிஞர் ராபர்ட் பால் கூறியிருக்கிறார்.

மூவர் மீதும் கொலை மற்றும் உயிரிழப்புக் காரணமாக இருத்தல் ஆகிய குற்றங்களுக்கு உடந்தையாக இருந்தது தொடர்பான குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு, அது தொடர்பான வழக்கும் நடக்கிறது. ஜூன் மாதம் அந்த விசாரணை நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.

x